Translated by Sandhya Raju
கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த அடர் மழையின் போது, தி.நகரில் வசித்த விஎஸ் ஜெயராமனை, தரைத்தளத்தில் வசிக்கும் அவரது சகோதரர் அதிகாலையில் எழுப்பினார். அதிகாலை வேளையில் அந்த குடியிருப்பு பரபரப்புடன் இருந்தது. தி.நகர் மோதிலால் சாலையில் உள்ள அந்த குடியுருப்பு முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்டு, தரைத்தளம் முழுவதும் நீர் புகுந்தது.
“உடனடியாக மாநகராட்சி அலுவலர்களுக்கும் ஆர் 1 காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தோம். காவல் துறை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக ஊழியர்கள் உதவியுடன், தரைத்தளத்தில் வசித்து வந்த என் 96 வயது அம்மாவை, முதல் மாடியில் உள்ள என் வீட்டிற்கு கொண்டு வந்தோம்” எனக் கூறும் ஜெயராமன் தி.நகர் குடியிருப்பு வாசிகள் சங்கத்தின் தலைவரும் ஆவார். மாநகராட்சி அலுவலர்களின் அறிவுறுத்தலின் படி குடியிருப்பின் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால், தண்ணீர் வெளியேற்றப்படும் வரை பல நாட்களுக்கு மின்சாரம் இல்லாமல் இருந்தோம்.
தி.நகரின் பல பகுதிகளில் இந்த நிலை காணப்பட்டது. பாஷ்யம் தெரு, பாண்டி பஜார், ஜிஎன் செட்டி சாலை, பஜுல்லா சாலையின் உள் சாலைகள், கிரி தெரு, உஸ்மான் சாலை, ரங்கனாதன் தெரு, ராமனாதன் தெரு என பல சாலைகளில் தொடர் மழை காரணமாக வெள்ள நீர் சூழ்ந்தது.
கொந்தளிக்கும் கோபம்
“அடிப்படை கட்டமைப்பு கூட அளிக்க முடியவில்லை என்றால், எதற்காக சொத்து வரி வசூலிக்க வேண்டும்?” என கோபமாக வினவுகிறார் ஜெயராமன். கடந்த ஆறேழு வருடங்களாக மழை வெள்ளம் பிரச்சனையில் தொடர்ச்சியாக கஷ்டப்படும் இந்த பகுதி மக்களின் கோபம் புரியத்தக்கதே ஆகும்.
சரியான கழிவு நீர் வடிகால், செயல்படக்கூடிய மழை நீர் வடிகால் ஆகிவற்றையே அடிப்படை கட்டமைப்பு குறைபாடாக ஜெயராமன் குறிப்பிடுகிறார். கடந்த 30 வருடங்களாக தி.நகரில் வசித்து வரும் இவர், ஒவ்வொரு முறை சென்னையில் கன மழை பெய்யும் போதும், இந்த பகுதியில் வெள்ளம் சூழும் நிலை உள்ளதாக கூறுகிறார். “குடியிருப்பு பகுதியில் உள்ள திறந்த வெளி கிணற்றில் அசுத்த நீர் கலப்பதால், இதை சுத்தம் செய்ய பெருந்தொகையை குடியிருப்பு சங்கம் செலவழிக்க நேர்கிறது. கிணற்றை சுத்தம் செய்ய ஒரே வருடத்தில் ஒரு லட்சத்திற்கு மேல் குடியுருப்பு சங்கம் செலவழித்துள்ளது.
Read more: Here’s why we should look at reviving open wells in Chennai this summer
நீர் தேங்குவதற்கான காரணம்
பகுதிவாசிகளுடன் பேசிய போது, பல ஆண்டுகளாக மழைவெள்ள பிரச்சனைக்கான காரணங்கள் தெளிவாக தெரிகின்றன.
- அடைபட்ட பாதாள சாக்கடைகள் மற்றும் பழுதடைந்த மழைநீர் வடிகால்
மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்வதில்லை என தி.நகர் ராமேஸ்வரம் தெருவில் வசிக்கும் சுமதி நம்மிடம் பகிர்ந்தார். “உதாரணமாக, ஒரு தெருவில் மூன்று மழைநீர் வடிகால்கள் இருந்தால், மாநகராட்சி அதிகாரிகள் அதன் மூடியை திறந்து அந்த ஒரு பகுதியை மட்டுமே சுத்தம் செய்கின்றனர். இரண்டு வடிகால்கள் இடையே உள்ளே சுத்தம் செய்யும் வழிமுறைகாள் இல்லாததால், தண்ணீர் செல்வதில் தடைகள் ஏற்படுகின்றன” என்கிறார் சுமதி.
இது தவிர, மழை அளவு, வடிகால் உள்ள பகுதி மேடானதா மற்றும் அதன் கொள்ளளவு ஆகியவையும் முக்கியம். பொதுவாக வடிகால்கள் மணிக்கு 5 முதல் 7 செ.மீ மழை அளவை தாங்க உருவாக்கப்பட்டவை என பெயர் வெளியிட விரும்பாத மாநகராட்சி பொறியாளர் நம்மிடம் பகிர்ந்தார். ஆனால், வழக்கத்தை விட 5-6 அளவு அதிக மழை பொழிந்துள்ளது. சென்னை 46 செ.மீ மழையை பெற்றுள்ளது.
- மாம்பலம் கால்வாயின் அடைப்பு
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சில ஆண்டுகளாகசெப்பனிடும் பணி நடைபெற்று வந்த மாம்பலம் கால்வாய் அருகிலும் தண்ணீர் தேங்கியிருந்தது மிகப் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. குப்பைகளை கொட்டுவதை தடுக்கும் பொருட்டு கால்வாய் மீது மூடி அமைத்தல் மற்றும் நடைபாதை, மிதிவண்டி டிராக், பூங்கா என பிற அழகுபடுத்தும் வேலைகளும் நடைபெற்று வந்தன.
முதற்கட்ட பெருமழையின் நான்காவது நாளில் தான் (நவம்பர் 10) மாம்பலம் கால்வாயில் உள்ள அடைப்பும் தண்ணீர் தேங்க ஒரு காரணம் என அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆறு மீ. நீளம் உள்ள இந்த கால்வாய் வள்ளுவர் கோட்டம் அருகிலிருந்து தொடங்கி அடையாறு ஆற்றில் கலக்கிறது.
மேற்கு மாம்பலம் அருகாமையில் உள்ள பகுதிகளில் நீர் தேக்க காரணம் குறித்து ஆராய அப்பகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநி மற்றும் குழு வீதி வீதியாக சென்ற போது, ஸ்மார்ட் சிட்டி திட்ட வேலைகளால் ஏற்பட்ட கழிவு குப்பைகளே வள்ளுவர்கோட்டம் முதல் ஜி.என்.செட்டி சாலை வரையிலான கால்வாயில் அடைப்பு ஏற்பட காரணம் என அறிந்து கொண்டனர்.
- சாலைகளின் அமைப்பு
சாலையின் தளம், அங்குள்ள வீடுகளை விட உயர்வாக அமைந்துள்ளதும் ஒரு காரணம் என பகுதி வாசிகள் கூறுகின்றனர்.
“முன்பதாக, வீட்டின் அமைப்பை விட சாலைகள் சில அடிகள் கீழிருக்கும். ஆனால், போகப்போக, சாலைகள் மீண்டும் மீண்டும் போடப்பட்ட நிலையில் அதன் தளம் குடியிருப்பு பகுதிகளை விட மேலே சென்று விட்டன. ஆகவே, மழை பெய்யும் போது, நீர் தேங்குவது வாடிக்கையாகி விட்டது”, என்கிறார் தி.நகரில் வணிக வளாகம் வைத்திருக்கும் கிரேஷ்.
இந்த குழப்பத்தின் நடுவே, தி.நகரில் வெள்ள பாதுகாப்புக்கு என ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட தொகை எங்கே சென்றது என்பதே குடியிருப்பு வாசிகள், சமூக வலைதளம், ஊடகம் என அனைவராலும் கேட்கப்படும் பிராதன கேள்வி.
Read more: All is not well at the T Nagar Pedestrian Plaza
ஸ்மார்ட் அடையாளமின்றி உள்ள நகரம்
ராமேஸ்வரம் தெருவில் தன் மருந்தகம் முன் தேங்கி உள்ள நீரை காட்டி “நம் ஸ்மார்ட் சிட்டியை பாருங்கள்” என சோகத்துடன் சொல்கிறார் சந்திரா போஸ்.பெருமழை பெய்யத் தொடங்கிய மூன்று நாட்களுக்கு பின், சிட்டிசன் மேட்டர்ஸ் தி.நகர் சாலைகளின் நிலையை கண்டறிய சென்ற போது, ராமேஸ்வரம் தெரு, ரங்கனாதன் தெரு, மாம்பலம் ரயில் நிலையம் ஆகிய சாலைகளை இணைக்கும் தெருக்கள் அனைத்தும் மழை நீரால் சூழப்பட்டு இருந்ததை கஆண முடிந்தது.
2018 ஆம் ஆண்டு, சென்னை மாநகராட்சி (ஜிசிசி), மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மழைநீர் வடிகால்களை மேம்படுத்துவதற்கும், தி நகர் வழியாகச் செல்லும் மாம்பலம் கால்வாயை மேம்படுத்துவதற்கும் 200 கோடி ரூபாய் முதலீடு செய்தது.
200 கோடி ரூபாயில் 120 கோடி ரூபாய் மழைநீர் வடிகால் அமைக்கவும், புனரமைக்கவும், 80 கோடி ரூபாய் மாம்பலம் கால்வாய்க்காகவும் செலவிடப்பட்டது” என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி.
“அவர்கள் உண்மையில் இவ்வளவு பணத்தை செலவழித்திருப்பார்களா என்று சந்தேகிக்கிறேன், அவர்கள் அவ்வாறு செய்திருந்தால், வெள்ளத்தின் தீவிரம் குறைந்திருக்க வேண்டும் அல்லவா?” என்று ஜெயராமன் கேட்கிறார், பலரைப் போலவே, ஸ்மார்ட் சிட்டி பற்றிய முழு யோசனையும் ஒரு கேலிக்கூத்து என்று அவர் எண்ணுகிறார்.
தி.நகரில் தண்ணீர் தேங்கிய பகுதிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளறுபடிகளால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும், முந்தைய அதிமுக அரசு “கமிஷன் பெற்றுக்கொண்டும்” “மோசடிகளை செய்தும் “இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை என்றும் கூறினார்.
சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் நிறுவனத்தின் அதிகாரி ஒருவரை நாங்கள் தொடர்பு கொண்ட போது, அவர் முழுப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பல்வேறு திட்டங்களுக்கு செலவிடப்பட்ட பட்ஜெட் குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளும் கிடைக்கவில்லை.
எதிர்காலம்
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜிசிசி இன்ஜினியர், சத்தியமூர்த்தி மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள மாம்பலம் கால்வாயில் நீர்ப்பிடிப்பு நீர் சீராக ஜிஎன் செட்டி சாலையில் செல்வதற்கு தேவையான அகலத்தை அதிகரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது என கூறினார்.
இரண்டாவதாக, கால்வாய் அருகே சைக்கிள் டிராக் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டத்தை ஸ்மார்ட் சிட்டி மிஷன் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் கருதுகிறார். “அதே போல், கால்வாயின் அளவு உடனடியாக தண்ணீர் வெளியேற்ற போதுமானதாக இல்லை. மேலும், தற்போது கால்வாயின் அகலத்தை குறைக்க விரும்புகிறார்கள், ”என்று அவர் மேலும் கூறினார். இப்பகுதியின் முழுமையான மறுவடிவமைப்பு குறித்து முடிவெடுக்க உயர் ஆணையம் ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சட்டசபையில் தனது முதல் உரையிலேயே, தி.நகர் தொகுதி முழுவதும், விரிவுபடுத்தப்பட்ட வடிகால் அமைப்பு தேவை என மேற்கோள் காட்டியதாக அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கூறினார். மழைநீர் திட்டத்திற்கு முந்தைய அரசு ரூ.200 கோடி செலவழித்தும், ஆற்றலை மேம்படுத்தவில்லை. இப்போது, நகரமயமாக்கல் காரணமாக, இப்பகுதியில் வீடுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, ஆனால் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் வீடுகளின் எண்ணிக்கையை ஒருபோதும் கருத்தில் கொள்ளவில்லை. அவர்கள் செய்ததெல்லாம் பழைய கான்கிரீட்டை அகற்றிவிட்டு புதிய கான்கிரீட் போட்டது தான். இது தீர்வாகாது,” என மேலும் அவர் கூறினார்.
இதற்கிடையில், வெள்ளம் மேலும் அதிகரித்துள்ளதால், தி நகரில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை தமிழக அரசு நிறுத்த வேண்டும் என்று ஜெயராமன் கருதுகிறார். “சரியான வடிகால் அமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் இல்லாத நகரத்தை அழகுபடுத்துவதில் என்ன பயன்?” என அவர் கேட்கிறார்.
[Read the original article in English here.]