என் ஞாயிற்றுக்கிழமையை நீ பாழாக்கி விட்டாய்! ஊருக்கு வந்த ஒரு பழைய நண்பரை சந்திக்க காத்திருந்த நாள். நான் தென் சென்னையிலும் அவர் வட சென்னையிலும் தங்கியிருந்ததால், என் சொந்தவூர் என்று பெருமையாக நினைக்கும் இந்த ஊரை சுற்றி போக்குவரத்து நெரிசலின்றி, நிம்மதியாக, இனிமையான பயணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எல்லாம் வீட்டை விட்டு வெளியேறும் வரை தான், வெளியேரியபின் எல்லாமே வேறு மாதிரி.
என் வண்டியை வெளியே எடுத்து, கியர் போட்ட பிறகு எல்லாம் ஒரு பயமுறுத்தும் அனுபவமாக மாறியது. நகர்வாசிகளுக்கு சேவை செய்ய கடமை பட்டிருக்கிறோம் என்ற எண்ணத்தை முற்றிலும் நிராகரித்து, நகரமே குத்தகைக்கு வண்ணம் தீட்ட விட்டாற்போல் காட்சியளித்தது. ஆமாம் உங்கள் தலைவர் நூற்றாண்டு தான், ஆனால் பொது இடங்களை உங்கள் கட்சியின் சொந்த இடம் போல உபயோகிக்க உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. உங்கள் தலைவர் உயிரோடு இருந்தால் உங்கள் அரசியல் விசுவாச ஆரவாரங்களை பார்த்து அவருக்கே பொறுக்காமல் முகம் சிணுங்குவார், அய்யோ என்று தலையில் அடித்துக்கொள்வார்!
சரி, தெரியாமல் தான் கேட்கிறேன்! நகரம் முழுவதும் இந்த நச்சு கொண்ட பிளெக்ஸ் பானர்களை வைத்து நிரப்ப என்ன அவசியம்? நடைபாதைகள், போக்குவரத்து சிக்னல்கள், சாலை வழிகாட்டிகள், பாராபெட் சுவர்கள், ஃப்ளையோவர்கள், பாலங்கள் என்று ஒரு இடம் விடாமல் மக்களுக்கு உபத்திரமாக, அவர்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் வைக்க என்ன அவ்வளவ்வு அவசியம் வந்துவிட்டது?
மேம்பாலம் நடுவில் வைக்கப்பட்டிருந்த பானரினால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து மயிரிழையில் தப்பித்தேன் ! ஒரு நொடியில், ஐம்பது அடி கீழே விழுந்து மண்டை அடிபட்டு உயிர் போயிருக்கும், இல்லை மூளைச்சாவு தான். முப்பதே வயதான ரகுபதி கந்தசாமி கடந்த நவம்பர் உங்கள் சட்ட விரோத பானரில் மோதி, அதனால் ஒரு தண்ணீர லாரியில் அடிபட்டு மரணமடைந்ததை மறந்து விட்டீரகளா? நீங்கள் செய்த காரியத்தால் அந்த இளைஞன் மற்றும் அவரது உற்றார் உறவினர்கள் வாழ்க்கையே தலைகீழாய் மாறியதை சற்றே சிந்தித்து பார்த்தீர்களா?
அந்த இளைஞன் பெண்பார்ப்பதற்காக அமெரிக்காவிலிருந்து வந்தான். உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் மணமுடிக்க வந்த அவனக்கு சாவு ஊர்காலமானது!
இதுபோன்ற அபாயங்கள் தாண்டி, போக்குவரத்து காவல் அதிகாரி பல சிக்னல்களில் என் மேல் எரிந்து விழுந்தார்! அவரும் உங்கள் கூத்தால் பாதிக்கபட்டர் போலும், பாவம் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கடும் வெயிலில் மாற்றுவழிகாட்டி துவண்டவர் வெறுப்பை வேறுயார் யார் மீது காட்டமுடியும்?
முன்பெல்லாம் தமிழ்நாட்டு திராவிட கட்சி அரசியலை நினைத்து பெருமை படுவேன். வட மாநிலத்திலிருந்து வரும் நண்பர்களிடம் 70-80களில் உங்கள் தலைவர்கள் இயற்றிய மக்கள் நல திட்டங்களை கூறி பெருமிதம் அடைவேன். ஆனால் கடந்த ஆண்டுக்கு பிறகு, அதிலும் நேற்று நடந்த சம்பவங்களுக்கு பிறகு எனது எண்ணம் அடியோடு மாறிவிட்டது. உங்கள் கட்சி பேரை கேட்டாலே உங்கள் இரக்கமற்ற, உணர்ச்சியற்ற, சுயநலமே உருவான கூட்டம்தான் நினைவுக்கு வருகிறது. இனி உங்களை நினைத்து பெருமிதமும் இல்லை, உங்களுக்காக பரிந்தும் பேசமாட்டேன். நான் மட்டும் இந்த முடிவுக்கு வரவில்லை, செய்திகள் பார்த்த மற்றும் இதனை நேரில் அனுபவித்து பொதுமக்களும் உங்கள் மீது கடுங்கோபம் கொண்டுள்ளனர்.
சரி, எப்போது தான் இதை நிறுத்தும் உத்தேசம்? உங்கள் பிறந்தநாள் விழாக்களுக்கு இன்னும் எத்தனை ரகுபதிக்களை பலிகொடுக்க திட்டமிட்டிருக்கிறீர்கள்? இதற்க்கும் மேல், சாலைகள் ஏன் இவளவு கேவலமான நிலையிலும், தெருவிளக்குகள் எரியாத நிலையிலும் உள்ளன? உங்களுக்கு வாக்களித்து ஜெயிக்க வைத்தவர்கள் இருட்டியபின் பயமின்றி எப்படி வெளியில் செல்வார்கள்? உங்களுக்கு உங்கள் கொண்டாட்டம் தான் முக்கியம்!
நிச்சயமாக என் வாக்கு உங்களுக்கு கிடையாது.
இப்படிக்கு,
பெயர் சொல்லி ஏதேனும் ஆகப் போகிறதா?
(Translated from English by Krishna Kumar. The original can be read here.)