Translated by Vadivu Mahendran
வீட்டிலிருந்து அலுவலகப் பணி செய்து கொண்டே, பல்வேறு விஷயங்களையும் நிர்வகிக்கும் சமயத்தில் அரவணைப்புக்காக ஏங்கி உங்களை நெருங்கும் ஒரு நாய் உங்களது மன அழுத்தத்தைக் குறைக்கும் ஒன்றாக இருக்கலாம். பெருந்தொற்றால் தொடங்கப்பட்ட ஊரடங்கின் போது காணப்பட்ட பலதரப்பட்ட போக்குகளில் நாய்க்குட்டிகளுக்கான தேவையின் அதிகரிப்பு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
“லாப்ரடார், ஹஸ்கி மற்றும் கோல்டன் ரெட்ரீவர் போன்ற அடுக்குமாடி குடியிருப்பு நாய்களுக்கான தேவை கடந்த ஆறு மாதங்களில் ஐம்பது சதவீதத்திற்கு மேலாக அதிகரித்துள்ளது. அனைத்துத் தரப்பு மக்களும் ஒரு நாயை வாங்குவதிலோ அல்லது தத்தெடுப்பதிலோ ஆர்வம் காட்டுகிறார்கள்“, என்கிறார் கோகுல்ராஜ் தர்மலிங்கம் எனும் நாய் வளர்ப்பாளர்.
ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு ஒரு செல்லப்பிராணியை எவ்வாறு கவனித்துக் கொள்வது என்பது தெரியும்? ஒரு பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பாளராக இருப்பதற்கு அது குறித்த அறிவும் அனுபவமும் தேவைப்படுகிறது, அதனால்தான் சமூக ஊடக சேனல்களில் புதிய செல்லப்பிராணி வளர்ப்பாளர்கள் பகிர்ந்து கொள்ளும் ஏராளமான கேள்விகள் மற்றும் சந்தேகங்களை நீங்கள் காண்பீர்கள். அவர்களுக்கான ஒரு விரிவான வழிகாட்டியை வழங்குவதற்காக நகரத்தில உள்ள சில விலங்கு ஆர்வலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுடன் நாம் உரையாடினோம்.
ஏன் நாட்டு வகைகள் புறக்கணிக்கப்படுகின்றன?
வேறு எந்த நகரத்திலும் போலவே, சென்னையிலும் அயல்நாட்டு ரகத்தைச் சேர்ந்த நாய்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்புத் தேவை உள்ளது. இருப்பினும், கால்நடை மருத்துவர்கள் நாட்டு நாய்களையே வாங்கவோ அல்லது தத்தெடுக்கவோ பரிந்துரைக்கிறார்கள்.
“நாட்டு நாய்களுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் அவைகளுக்குக் குறைந்த பராமரிப்பு தேவைப்படுவதோடு மரபணு குறைபாடுபாடுகளுக்கும் அதிகம் ஆளாவதில்லை. பக்ஸ், ஹஸ்கீஸ் மற்றும் ரோட்வீலர்கள் ஆகியவைகள் திடீர் விழித்திரை பாதிப்புக்கு உள்ளாகின்றன; இவற்றின் உரிமையாளர்கள் நாட்டு நாய்களை வைத்திருப்பவர்களை விட அடிக்கடி மருத்துவமனைகளுக்கு விஜயம் செய்கிறார்கள்,“ என்கிறார் தனியார் கால்நடை மருத்துவரான சதீஷ் குமார்.
நாட்டு நாய் வகைகளான கன்னி, சிப்பிபாறை மற்றும் இந்தியன் பாரியா நாய்கள் அதிகளவு உயிர் பிழைக்கும் சக்தியைக் கொண்டுள்ளன மேலும் அவை நன்கு பயிற்றுவிக்கப்பட்டால் நட்பான செல்லப்பிராணிகளாக ஆக முடியும். ஆனால் பெரும்பான்மையானோர் இந்த இந்திய இனங்களை நோக்கி ஏன் செல்வதில்லை?
“பெரும்பாலான மக்கள் பெருமைக்காக ஒரு வெளிநாட்டு இன நாயை வாங்குகிறார்கள். ஊடகங்கள் சரியான தகவல்களை பரப்ப உதவினால் இத்தகைய மனநிலையை மாற்றலாம். உதாரணமாக, திரைப்படங்களில் இந்திய இன நாய்களை சித்தரிப்பது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்திய ராணுவம் மற்றும் வெடிகுண்டு பிரிவுகள் நாட்டு நாய்களைப் பயிற்றுவிக்க ஆரம்பித்துள்ளது, காலப்போக்கில் சரியான மாற்றத்தைக் கொண்டுவரும்“, என நம்புகிறார், விலங்கு உரிமை ஆர்வலரான ஜெயந்த் பிரகாஷ்.
ஒரு நாய்க்குட்டியை வாங்கும்போது /தத்தெடுக்கும்போது:
- 45 நாட்களுக்குக் குறைவான வயதுடைய ஒரு நாய்க்குட்டியை வாங்காதீர்கள். இளம் வயதில் தாயுடன் தங்குவது சமூகத்துடன் பழகவும் மற்றும் நடத்தை திறன்களைக் கற்றுக்கொள்ளவும் உதவுகிறது.
- தாய் இறந்து விட்டாலோ அல்லது குட்டியை தாயிடமிருந்து பிரிக்க வேண்டிய சூழ்நிலை இருந்தால், அவைகள் 45 நாட்கள் வரை வீட்டிற்குள்ளேயே இருப்பதை உறுதி செய்யுங்கள். நாய்க்குட்டிகளுக்கு 45 நாட்கள் ஆகும் வரை தடுப்பூசி போட முடியாது. அதற்குள்ளாக அவற்றை வெளியில் விடுவதால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு அவை ஆளாகக்கூடும்.
- தெருக்களிலிருந்து புதிதாகப் பெறப்பட்ட விலங்குகளுக்கு, ஒரு கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் உடனடியாக குடற்புழு நீக்கம் செய்யப்பட வேண்டும். ஒரு இரத்த பரிசோதனையானது, அவற்றிற்கு இன்னும் பிற நோய்கள் இருந்தாலோ மற்றும் அதற்குத் தேவையான கவனிப்பு முறையையும் வெளிப்படுத்திட இயலும்.
- நாய்க்குட்டிகள் / பூனைக்குட்டிகளுக்கு இரண்டு, நான்கு, ஆறு, எட்டு, பன்னிரண்டு மற்றும் பதினாறு வாரங்கள் வயதில் இருக்கும்போது குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். வயதுவந்த செல்லப்பிராணிகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.
- நாய்க்குட்டிக்கு 45 நாள் ஆனவுடன் தடுப்பூசி போடுங்கள். நாய்வெறி நோய் தடுப்பூசி மற்றும் கேனைன் டிஸ்டெம்பர், கல்லீரல் பாதிப்பு, கொரோனா வைரஸ் என்டெரிடீஸ், இன்புளூயன்ஸா, பர்வோ வைரஸ் மற்றும் லெப்டோஸ்பிரோசிஸ் ஆகியவற்றிலிருந்து செல்லப்பிராணிகளைப் பாதுகாக்கும் ரேபீஸ் எதிர்ப்பு மற்றும் 7 இன் 1 தடுப்பூசி கட்டாயமாகும்.
- நீங்கள் ஒரு நம்பகமான இடத்திலிருந்து ஒரு நாயை த்த்தெடுக்கிறீர்கள் என்றால், அவர்களிடமிருந்து தடுப்பூசி பதிவுகளைப் பெறுங்கள்.
சமூக பொறுப்புகள் என்ன?
பல குடியிருப்புகளில் செல்லப்பிராணிகள் மற்றும் அவற்றின் உரிமையாளர்கள் மீது மனக்கசப்பு உள்ளது. எவ்வாறாயினும், இந்திய விலங்குகள் நலவாரியம் எனும் விலங்குகளுக்கான கொடுமையைத் தடுக்கும் சட்டத்தின் 4வது பிரிவின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஒரு சட்டபூர்வமான அமைப்பானது இந்த அம்சத்தில் வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
- எந்தவொரு கட்டிட சங்கமும் மற்ற அனைவரின் அல்லது பெரும்பான்மையான குடியிருப்பாளர்களின் ஒருமித்த சம்மதத்தைப் பெறுவதன் மூலமாகவோ மக்கள் செல்லப்பிராணி வைத்திருப்பதை சட்டப்பூர்வமாகத் தடை செய்ய முடியாது
- குரைப்பது ஒரு நாய்க்கான இயற்கையான வெளிப்பாடாகும் மேலும் இது சமூகத்தில் பொறுத்துக்கொள்ளப்பட வேண்டியதாகும். ஆனால் இடைவிடாத குரைப்பு அண்டை வீட்டார்களைத் தொந்தரவு செய்யும் என்பதால், செல்லப்பிராணி உரிமையாளர்கள் தங்கள் நாய்களை அமைதியாக வைத்திருக்க எல்லா முயற்சிகளையும் எடுக்க வேண்டும், குறிப்பாக இரவு நேரங்களில்.
- செல்லப்பிராணி உரிமையாளர்கள் / நாய் நடைப் பயிற்சியாளர்கள் பொது இடங்களில் அவற்றின் அசுத்தத்தை சுத்தம் செய்வதற்கான குடிமையுணர்வைக் கொண்டிருக்க வேண்டும். ஒரு குடியிருப்பில் உள்ள பொதுவான இடத்தை அசுத்தப்படுத்தாததை உறுதி செய்யவேண்டும்.
- உங்கள் செல்லப்பிராணிகளை பொது இடங்களில் தோல்வார் கொண்டு கட்டியே வைத்திருங்கள்.
- எந்தவொரு குடியிருப்பு சங்கம் அல்லது குடியுரிமை நலச் சங்கமும் உங்களையும் உங்களது செல்லப்பிராணிகளையும் மின் உயர்த்தியைப் பயன்படுத்துவதிலிருந்துத் தடுக்க முடியாது. இருப்பினும் உபயோகப்படுத்தக் கூடிய நிலையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் உயர்த்தி இருந்தால் மாற்று மின் உயர்த்தியைப் பயன்படுத்துவதை ஆட்சேபிக்க வேண்டாம்.
நாய்கள் குறித்த கேள்விகளை இடுகையிடுவதற்கான சமூக ஊடக தளங்கள்:
- சென்னையில் செல்லப்பிராணிகள் தத்தெடுப்பு
- நாய் வளர்ப்போர் சங்கம்
- சென்னையில் செல்லப்பிராணி தத்தெடுப்பு / வளர்ப்பு
சென்னையில் உள்ள நம்பகமான கால்நடை மருத்துவமனைகளின் பட்டியல்:
Madras Veterinary College Hospital (open 24*7), Vepery | 044 2530 4000 |
Camp Road animal hospital, Tambaram | 9444191634 |
SKS pet Hospital, Abiramapuram | 8680070001 |
Pasteur pet clinic, Greenways Road | 9884148800 |
Sanchu Animal Hospital, Adyar | 94451 60101 |
Thanigal Pet care clinic, Velachery | 9884640452 |
JP pet speciality hospital, Adyar | 04424411909/ 9444385393 |
Paws and claws vet clinic, T Nagar | 09566176832 |
Raksha Pet clinic, Chrompet | 09840884426 |
இது முக்கியமான அறுவை சிகிச்சைகள் மற்றும் எக்ஸ்-ரே மற்றும் ஈ.சி.ஜி போன்ற நோயறியும் சோதனைகளை வழங்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் தொகுக்கப்பட்ட பட்டியலாகும்.
அவசரகால அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில், செல்லப்பிராணி உரிமையாளர்கள் கட்டணமில்லா எண் – 1962 ஐ அழைப்பதன் மூலம் நடமாடும் விலங்கு மருத்துவ அவசர ஊர்தி வசதியையும் பெறலாம்.
கோவிட்-19 க்கு பிந்தைய சூழ்நிலைக்கு உங்கள் செல்லப்பிராணியை தயார் படுத்துவது எப்படி?
எங்கள் செல்லப்பிராணிகள் எப்போதும் நாங்கள் வீட்டிலிருப்பதற்கு மிகவும் பழகிவிட்டன. உண்மையில், கடந்த ஐந்து மாதங்களில் தத்தெடுக்கப்பட்ட குட்டிகளுக்கு அவர்களின் பெற்றோர் இல்லாமல் வீட்டில் தனியாக இருந்ததில்லை. தங்களின் மனிதர்கள் மீண்டும் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய நிலை வந்தால் அந்நிலைமையை அவைகள் எவ்வாறு எதிர்கொள்ளும்?
தனது உரிமையாளர் இல்லாத நிலையைக் கையாள்வதில் நாய்களுக்கு சிரமம் இருக்கும் என்பதைக் கால்நடை மருத்துவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். அவைகள் பிரிவின் ஏக்கத்தால் தமது நடத்தையில் கடுமையான மாற்றத்தை வெளிப்படுத்துவார்கள். “அவற்றின் ஆகாரக் குறைப்பு மற்றும் தூங்குவதில் பிரச்சினை ஆகியவை அதன் அறிகுறிகளாக இருக்கலாம்“, என்று தாம்பரம், முகாம் சாலை விலங்கு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை பேராசிரியரும் தலைமை ஆலோசகருமான டாக்டர். மொஹமது ஷஃபியுசாமா கூறுகிறார்.
செல்லப்பிராணிகள் சுயாதீனமாக இருப்பதற்கு தயார் செய்ய கட்டுப்பாடுகளுடனான சில நாட்கள் தேவை. “வழக்கத்தை மாற்றுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே, நாம் செல்லப்பிராணியுடன் செலவழிக்கும் நேரத்தை படிப்படியாகக் குறைக்க வேண்டும். முதலில் சில மணி நேரங்களுக்கு அவற்றைத் தனியே விடுங்கள். இது தொடர்ச்சியாக செய்யப்பட்டால், அவைகள் நீண்ட நேரம் உரிமையாளர் இல்லாத நிலைக்குத் தயாராகி விடும்,“ என டாக்டர். ஷஃபியுசாமா பரிந்துரைக்கிறார்.
விடுதியை எவ்வாறு தேர்வு செய்வது?
பரிசோதனையில் கோவிட்-19 தொற்றால் பாதிப்பு என அறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை விடுதியில் விட்டுவிட்டு செல்கிறார்கள். ஆனால். அப்படி இல்லையென்றாலும், இயல்பு வாழ்க்கையில், சில சூழ்நிலைகள் எழலாம் – உதாரணத்திற்கு நீங்கள் பணி நிமித்தமாகவோ அல்லது குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ளும்போது – விடுதி வசதிகள் மிகவும் முக்கியமானதாகின்றன.
ஒருவர் தனது உரோமக்கார நண்பனுக்கு தங்கும் விடுதியை எவ்வாறு தேர்வு செய்கிறார்? இங்கே ஒரு விளக்கம்.
- விடுதியை நேரடியாகப் பார்வையிடவும். சமூக ஊடக பதிவுகளை நம்ப வேண்டாம்.
- விடுதியின் நிர்வாகத்திடம், வர்த்தக உரிமம், மாநில விலங்கு நல வாரியத்தின் உரிமம் மற்றும் ஜி.எஸ்.டி கவுன்சிலின் சான்றிதழ் ஆகியவற்றைக் கோரவும்.
- நீங்கள் விடுதியைப் பார்வையிடும்போது, கொட்டில்களை மற்றும் பிற நாய்களின் நடத்தையையும் அவதானிக்கவும். உதாரணமாக, இக் கொட்டில்களில் உள்ள பெரும்பான்மையான நாய்கள் தங்கள் உணவை உட்கொள்ளவில்லையென்றால், அது தரமற்றது என்று அர்த்தமாகும்.
- கவனிப்பாளரிடம் நீண்ட நேரம் உரையாடுங்கள். அவனோ / அவளோ செல்லப்பிராணிகளுடன் நடந்து கொள்ளும் விதம் விலங்குகள் மீதான அவர்களின் அக்கறையை வெளிப்படுத்தும்.
- உங்கள் செல்லப்பிராணிகளுக்கு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதால் சுகாதாரத்தில் சமரசம் செய்ய வேண்டாம். விடுதி உரிமையாளர்களிடம் அங்கு தங்கியிருக்கும் போது நாய்களுக்கு உண்ணித்தொற்று ஏற்படாது என்பதை எவ்வாறு அவர்கள் உறுதி செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். கொட்டில்களின் சுவர்கள் மற்றும் கதவுகள் உண்ணிகளற்று இருப்பதை உறுதி செய்யுங்கள்.
- கொட்டில்கள் இரசாயனப் புகை போடப்பட்டிருக்கிறதா என்பதை சோதிக்கவும்.
- கொட்டில் சுத்தம் செய்யப்படும்போது, செல்லப்பிராணி வசதியாக உட்காருவதற்கு ஒரு கூடுதல் தளம் இருக்கிறதா என்பதைப் பார்க்கவும்.
- உணவு எங்கே சமைக்கப்படுகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
- விடுதிகள் பெரும்பாலும் உங்களிடம் ஒரு பெரும் தொகையை வசூலிக்கின்றன. ஆகையால், சி.சி.டிவி கண்காணிப்பு மற்றும் குளிரூட்டப்பட்ட அறைகள் போன்ற வசதிகளைக் கேட்பது உங்கள் கடமையாகும்.
- செல்லப்பிராணி ஏற்புடைய ஒரு சுற்றுப்புறத்தில் விடுதியைத் தேர்வு செய்க.
- இந்த மையங்களில் பராமரிப்பாளர்கள் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது செல்லப்பிராணிகளை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்கிறார்களா என்பதைக் கண்டறியுங்கள்.
- உங்களை விட்டுப் பிரிவது உங்கள் நாய்க்கு கடினமான ஒன்றாகும். ஆகையால், நீங்கள் அவற்றை விடுதியில் விடத் தீர்மானிக்கும்போது, நுழைவாயிலில் விட்டுவிட்டு செல்ல வேண்டாம். செல்லப்பிராணியை கொட்டிலில் விட்டு அது சௌகரியமாக இருக்கும் வரை சிறிது நேரம் காத்திருங்கள்.
Facility | Contact |
Dog house | 9500058836 |
Sakunthala’s pet stay | 7904145642 |
Benzi pet stay | 9884780654 |
Happy Paws pet homestay | 9962533570 |
Read the original article in English here.