Translated by Sandhya Raju
கே கே நகர் சிவன் பார்க்கில் உள்ள ஸ்கேட்டிங் ரிங் பார்த்ததுமே எட்டு வயது சிறுவன் சரத்திற்கு உற்சாகம் பொங்கும். பொது முடக்கம் அமலுக்கு வந்த சில மாதம் முன்பு வரை இதில் பயிற்சி பெற்று வந்த சரத், விளையாட்டை மேம்படுத்த ஆர்வமாக காத்திருந்தான். ஸ்கேட்டிங் உபகரணங்களை வாங்க தன் பெற்றோரை வற்புறுத்தி அனுமதியும் பெற்றிருந்தான்.
ஆனால் சிவன் பார்க்கில் உள்ள ஸ்கேட்டிங் ரிங்கை உபயோகிக்க சமீபத்தில் விதிக்கப்பட்ட கட்டணத்தால் பல சிறுவர்களைப் போல், சரத்தும் பாதிக்கப்பட்டுள்ளான். தற்போது பூங்கா நிர்வாகப் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஸ்கேட்டிங் ரிங்கை பயன்படுத்த 500 ரூபாய் மாதக் கட்டணமாக அந் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.
இதே போல் பல இடங்களில் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பூங்காக்களில் உள்ள பாட்மிடன் கோர்ட், ஸ்கேடிங் ரிங்க் ஆகியவற்றை பயன்படுத்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நகரத்தில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பூங்காக்களின் நிர்வாகத்தை தனியாரிடம் ஒப்படைக்க இருப்பதாக, சமீபத்தில் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், இதற்கு எதிர்ப்புகள் வலுப்பெற்றுள்ளது. சில பூங்காக்களுக்கு டென்டரும் கோரப்பட்டுள்ளது.
பூங்கா நிர்வாகம்
சென்னை நகர எல்லைக்கு உட்பட்டு மொத்தம் 669 பூங்காக்கள் உள்ளன. சில பூங்காக்களில் ஸ்கேட்டிங், டென்னிஸ், பாட்மிட்டன் போன்ற கட்டமைப்பு வசதிகள் உள்ளது. மாநகராட்சியின் கள ஊழியர்களைப் பயன்படுத்தி நேரடி பராமரிப்பு, தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் பராமரிப்பு மற்றும் சி.எஸ்.ஆரின் ஒரு பகுதியாக நிறுவனங்கள் தத்தெடுப்பதன் மூலம் பராமரிப்பு போன்ற பல்வேறு மாதிரிகள் மூலம் இந்த பூங்காக்களை சென்னை மாநகராட்சியின் பூங்கா துறை பராமரித்து வந்தது.
உள்கட்டமைப்பு வசதிகளை சரிவர பராமரிக்காதது, சில பூங்காக்களை முற்றிலுமாக பராமரிக்காதது போன்ற பல்வேறு காரணத்திற்காக இதற்கு முன்னர், பூங்கா துறை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளன. குறைவான ஊழியர்கள் உள்ளதால், பராமரிப்பில் சவால்கள் இருந்தது. ஆண்டுக்கு சுமார் 50 கோடி வரை செலவிடப்படுவதாக மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார். ஆனால் தனியார் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள கட்டணம் குறித்த கேள்விக்கு கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர்.
குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா என்பதிலிருந்து, குடியிருப்பு வாசிகள் கூடும் இடமாகவும் பின்னர் குப்பை கொட்டும் பகுதியாகவும், குற்றவாளிகளின் உறைவிடமாகவும் கடந்த சில வருடங்களாக பூங்காக்கள் மாறியுள்ளன. எங்கு பார்த்தாலும் சிகரட் துண்டுகளும், மது பாட்டில்களும் உள்ளதால் இந்த இடத்திற்கு நாங்கள் குழந்தைகளை அனுப்புவதில்லை. அதற்கு பதிலாக தெருவில் விளையாடுவது பரவாயில்லை என நான் அனுமதிப்பேன்,” என்கிறார் வேம்புலியம்மன் நகரில் வசிக்கும் கவிதா.
இதே நிலையில் தான் பல பூங்காக்கள் உள்ளன. விளையாட்டு சாதனங்கள் பராமரிப்பின்றி துரு பிடித்து ஆபத்தை விளைவிப்பதாகவே உள்ளது. “துரு பிடித்த சறுக்கு மரத்தால் என் குழந்தையின் நண்பர்கள் பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஊஞ்சல், சறுக்கு மரம் ஆகியவை பரமாரிப்பின்றி உள்ளன. நடை பாதையிலும் கற்கள் இருப்பதால், இதை பயன்படுத்துவதை தவிர்ப்பதே நல்லது என தோன்றுகிறது,” என்கிறார் கில் நகரை சேர்ந்த கே ஷாந்தினி.
அனைத்து பூங்காக்களிலும் பாதுகாவலர் இருக்க வேண்டும். இந்த நடைமுறை இல்லாததால் சமூக விரோதிகளின் உறைவிடமாக பூங்காக்கள் மாறியுள்ளன.
“பொது முடக்கத்தின் போது அதுவும் பீச்சிற்கு செல்ல முடியாத நிலையில் குழந்தைகளை காற்றோட்டமான இடத்திற்கு அழைத்து செல்ல, பூங்கா ஏதுவாக இருக்கும். ஆனால், பெரிதாக இருந்தாலும் இங்குள்ள பூங்கா சரியாக பராமரிக்கப்படவில்லை. பூங்கா மூடப்பட்டாலும், சுவர் ஏறி குதித்து மது அருந்துவதால், எங்கு பார்த்தாலும் குப்பையும், மது பாட்டில்களாக உள்ளது. இதனால் குழந்தைகளை அழைத்துச் செல்ல முடியவில்லை,” என்கிறார் சிட்கோ எஸ்டேட் பகுதியில் வசிக்கும் எல் கீர்த்திவாஸ்.
தனியார் நிறுவனங்களின் பராமரிப்பு
ஊழியர்கள் பற்றாக்குறை, போதிய நிதி இல்லாதது என மாநகராட்சி அவதிப்படும் நிலையில், தனியார் பராமரிப்புக்கு விடப்பட்டுள்ள பூங்காக்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது விவாதப்பொருளாகியுள்ளது.
2019 ஆம் ஆண்டு பூங்காவில் உள்ள 16 ஸ்கேட்டிங் ரிங், 12 டென்னிஸ் கோர்ட் மற்றும் 9 பாட்மிடன் கோர்ட் ஆகியவை தனியார் பராமரிப்பிற்காக விடப்பட்டது. அப்பொழுதிலிருந்தே அதிக கட்டணம் விதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தன.
தனியார் பராமரிப்பில் இருந்த நவீன வசதியுள்ள ஒரு பாட்மிடன் கோர்ட், அரசியல் சார்பு உடைய சிலரால், பிறர் உபயோகிக்க முடியாத படி ஒரு ஆண்டுக்கு முன்பதிவு செய்யப்பட்டது.
“மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு கட்டணமில்லா வசதி என்றாலும், ஸ்கேடிங் மற்றும் டென்னிஸ் விளையாட வசூலிக்கப்படும் 500-2000 ரூபாய் தொகையை கூட செலுத்த முடியாத நிலையில் பலர் உள்ளனர். அனைவருக்கும் இலவசமாக இருந்த இடத்தைப் பயன்படுத்த பிற மாற்று வழிகளை இப்போது நாம் கண்டுபிடிக்க வேண்டும்.,” என சிவன் பார்க்கில் விதிக்கப்பட்டுள்ள கட்டணம் குறித்து கே கே நகரை சேர்ந்த ராமன் கூறினார்.
குடியிருப்பு வாசிகளின் கோரிக்கை
மாநகராட்சியின் பராமரிப்பின்மை மற்றும் தனியார் நிறுவனத்தின் கட்டண விதிப்பு என இடையில் தவிக்கும் இந்த பகுதி மக்கள், கட்டண விதிப்பிற்கு எதிராக கையெழுத்து பிராச்சாரத்தை மேற்கொண்டனர்.
“இப்பொழுது ஸ்கேடிங் ரிங்க் பயன்படுத்த கட்டணம் விதித்த இவர்கள் பூங்காவில் நுழையவும் கட்டணம் வசூலிக்க மாட்டார்கள் என நிச்சயம் ஏதுவுமில்லை. பொது இடங்களை பராமரிப்பது மாநகராட்சியின் கடமையாகும். கீழ் நிலையில் உள்ள மக்கள், அவர்களின் குழந்தைகள் விளையாட ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்த சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. உடற்பயிற்சிக்கு காரணமாக திகழும் விளையாட்டுகளை குழந்தைகள் விளையாட இது தடையாக அமையும்,” என்கிறார் சி சந்தீபன்.
மாநகராட்சி கோரியுள்ள டெண்டரில் தனியார் நிறுவனங்கள் கட்டண விதிப்பு குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
பாதுகாவலர், காலை 5 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நிபந்தனையின்றி பூங்காவில் அனுமதி என டெண்டரில் சில முக்கிய அம்சங்கள் உள்ளன. ஆனால், பூங்காவில் உள்ள வசதிகளைப் பயன்படுத்துவதில் இருந்து பலரை விலக்குவது குறித்து கவனிக்கப்படாமல் உள்ளது பலருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.
The original article in English can be read here.