Translated by Sandhya Raju
‘அழுக்கு, குப்பைகள், அதிக அமிலத்தன்மை கொண்ட கறுப்பு நீர், துர்நாற்றம்’ இப்படித்தான் ஓட்டேரி நல்லாவை அதன் ஒட்டி வாழும் மக்கள் வர்ணிக்கிறார்கள்.
சென்னயில் உள்ள 32 இயற்கையான கால்வாய்களில் ஒட்டேரி நல்லாவும் ஒன்றாகும். பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ள நீரை வெளியேற்றும் உள்ளூர் நீர்வழி அமைப்பாக முக்கிய பங்காற்றிய இந்த கால்வாய், பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால் குப்பைகள் மற்றும் கழிவுகளை கொட்டும் இடமாக மாறிவிட்டது.
2015 வெள்ளம் இன்றும் இங்குள்ள மக்கள் மனதில் பீதியை உண்டாக்குகிறது. ஆனால், ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும், 10.2 கி.மீ நீண்ட ஒட்டேரி நல்லா கரையோரத்தில் வசிக்கும் மக்கள் வெள்ள பாதிப்பை சந்திக்கின்றனர்.
ஓட்டேரி நல்லாவின் முக்கியத்துவம்
கூவம், அடையாறு, கொசஸ்தலையாறு ஆகிய ஆறுகள் சென்னை வழியாக பாய்கின்றன. கடற்கரைக்கு இணையாக ஓடும் பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் மற்றும் அடையாறு ஆகியவற்றை இணைக்கிறது.
கொசஸ்தலையாற்றின் துணை நீர்ப்பிடிப்புப் பகுதியான கிழக்கு-மேற்கு ஓடையான ஓட்டேரி நல்லா, பாடி மேம்பாலம் அருகே அண்ணாநகரில் தொடங்கி ஐசிஎஃப் காலனி, கீழ்ப்பாக்கம் கார்டன் காலனி, ஆஸ்பிரான் கார்டன் காலனி, கெல்லிஸ், புரசைவாக்கம், ஓட்டேரி மற்றும் பக்கிங்ஹாம் மற்றும் கார்னாட்டிக் மில் வழியாக பேசின் பாலத்தில் பக்கிங்ஹாம் கால்வாயில் கலக்கிறது.
கொசஸ்தலையாற்றின் துணை நீர்பிடிப்பு பகுதி மட்டுமின்றி, அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் வில்லிவாக்கம் ஏரிகளில் இருந்து லூகாஸ் டிவிஎஸ் கால்வாய் மூலம் அதிகப்படியான மழைநீரை வெளியேற்றும் முக்கிய பங்கையும் வகிக்கிறது.
பழங்காலத்தில், இந்த கால்வாய்கள் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்வதற்கும், பாசன வாய்க்கால்களில் இருந்து அதிகப்படியான நீரை வெளியேற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டன. கோடைக்காலத்தை தவிர, வருடத்தில் 10 மாதங்கள் இதில் புதிய நீர் ஓடும். உயிரியல் வாழ்விடமகவும் இது திகழ்ந்தது.
இது மட்டுமின்றி, நிலத்தடி நீராதாரமாகவும் இது திகழ்ந்தது.
Read more: When eri restoration is just another name for eviction of the working classes
குப்பை கூளமாக மாறிய ஓட்டரி நல்லா
நகரமயமாக்கல், பராமரிப்பின்மை, தூர்வாராதது போன்ற காரணங்களால் வடகிழக்கு பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர்) மற்றும் ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் மிதமான தென்மேற்கு பருவமழை காலத்தில், இங்கு வெள்ளம் சூழும் நிலை உண்டானது. வடகிழக்கு பருவ மழை காலத்திற்கு முன்பாக மட்டும் தூர்வாறும் பணி நடைபெறும்.
“தென் மேற்கு பருவ மழை காலத்தில் கூட மூன்று நான்கு மணி நேரம் தொடை மழை பெய்ந்தால், கால்வாய் நிரம்பி, தண்ணீர் சாக்கடையுடன் கலந்து வீடுகளில் புகுந்து விடும். அங்கொன்று இங்கொன்றுமாக கால்வாய் சுத்தம் செய்யப்பட்டாலும், முழுவதுமாக சுத்தப்படுத்த நடவடிக்கை இது வரை எடுக்கப்படவில்லை,” என்கிறார் ரயில்வே காலனியில் வசிக்கும் அற்புத மேரி.
உமா காம்பிளக்ஸ் பாலம் அருகே கட்டிட கழிவுகள் அதிக அளவில் கொட்டப்படுவதாக கூறும், கீழ்ப்பாக்கம் குடியிருப்போர் நலச்சங்கத்தின் முன்னாள் தலைவர் பிரகாஷ் எச் லுல்லா, இது குறித்து பல முறை மனு அளிக்கப்பட்டதாகவும் கூறுகிறார். “கட்டிடக் கழிவுகள் இடையே எப்ப்படி மழை நீர் போகும்” என அவர் வினவுகிறார்.
தூர்வார ஏப்ரல் மே மாதங்கள் தான் சரியானது. இதன் பலனை ஜூன் – செப்டம்பர் மாதங்களில் தான் அளவிடமுடியும். வட கிழக்கு பருவ மழையின் போது தேர்ந்த மேலாண்மைக்கு இது உதவும்” என மேலும் அவர் கூறினார்.
அது மட்டுமின்றி, ஜூன் மாதத்திற்குள் தூர்வாராவிட்டால், மழைக்காலத்தில் கொசு தொல்லை அதிகமாகி, மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.
கோவிட் தொற்று இன்னும் விலகாத நிலையில், கொசுத்தொல்லையும் சேர்ந்தால், ஏற்கனவே தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிப்பு சக்தி குறைந்துள்ளதால், மேலும் சிரமப்படும் வாய்ப்புள்ளது” என்கிறார் பிரகாஷ்.
கீழப்பாக்கத்தில் சலையோர சிற்றுண்டி கடை வைத்திருக்கும் கே ஷாந்திக்கு, இந்த சுகாதாரமற்ற நிலை பெரும் தாக்கத்தை உண்டாக்கியுள்ளது.
“ஒரு நாள் உடம்பு சரியில்லாமல் போனால் கூட, சுமார் ₹700 தினக்கூலி போய்விடும். இது தவிர, மருந்து மாத்திரை, டாக்டர் என செலவு. சமைக்க முடியாவிட்டால், முழு குடும்பத்திற்கும் வெளியில் வாங்கும் சாப்பாடு செலவு சேர்ந்து விடும்,” என கூறுகிறார்.
Read more: Saving lakes in Chennai: Why maps and physical markers are critical
தூர்வாருவது மட்டுமே தீர்வாகுமா?
கால்வாய் அடைப்பை சீர் செய்ய தூர்வாருதல் மட்டுமே தீர்வென முடிவெடுக்காமல், ஒட்டுமொத்தமாக இந்த பிரச்சனையை அணுக வேண்டும்.
நீள அடிப்படையில், இது ஆடையாறு ஆற்றை விட ஐந்தில் ஒரு பகுதி தான். ஆக்கிரமிப்புகள் காரணமாக இதன் அகலம் வெகுவாக சுருங்கியுள்ளது. கால்வாயின் கரையோரம் மட்டுமல்லாமல் நீர்பிடிப்பு பகுதிகளிலும் கட்டிட ஆக்கிரமிப்புகள் உள்ளன. இயற்கையான கால்வாய்களின் அகலம், பிற ஏரிகள், நீர் நிலைகளிலிருந்து வரும் உபரி நீர் காரணமாக தானாகவே அதிகரிக்கும் தன்மை உடையவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2015 வெள்ளத்தின் போது, கொரட்டூர் ஏரியில் இருந்து வெளியேறும் இடமான ஓட்டேரி நல்லா அதன் தொடக்கப் பகுதியில அதிகபட்ச கொள்ளளவை எட்டியது. நீர் வரத்து அதிகரிக்க அதிகரிக்க, லூகாஸ் டிவிஸ் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து உபரி நீர், ஓட்டேரி கால்வாயில் கலப்பது பெரும் சவாலாகும். இதனால் இந்த பகுதிகளில் வெள்ளம் சூழும் நிலை ஏற்படுகிறது.
கால்வாயின் அகலம், பிற பகுதிளிலிருந்து பெறப்படும் நீர் சேரும் போது அதன் கொள்ளளவு ஆகியவற்றை பொறுத்து நீர் பிடிப்பு பகுதிகளின் அளவை கணக்கிட வேண்டும். “வளசரவாக்கம், விருகம்பாக்கம் கால்வாய்களில் பிற பகுதி நீர் கலப்பதில்லை, ஆனால் அம்பத்தூர், கொரடூர், வில்லிவாக்கம் ஏரிகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் ஓட்டேரி நல்லாவில் கலக்கிறது. அதன் இயற்கையான அகலம் பாதுகாக்கப்படாவிட்டால், தூர்வாறுதல் மட்டுமே வெள்ளத்தை கட்டுப்படுத்தாது.,” என்கிறார், அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஹாரிஸ் சுல்தான்.
ஒரு காலத்தில் தூய்மையான நீரை சுமந்த இந்த கால்வாய், தற்போது வருடம் முழுவதும் அழுக்குகளையும் குப்பைகளையும் சுமக்கிறது. நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்கவும், மழைக்காலத்தில், தண்ணீர் ஓட்டத்திற்கு ஏதுவாகவும், கால்வாயின் சில பகுதிகளில் சிமன்ட் சுவர் எழுப்பட்டுள்ளது.
“கழிவுநீரில் இருந்து வண்டல் படிவதை இது தடுத்தாலும், மழைநீர் நிலத்தில் ஊடுருவுவதைத் இது தடுக்கிறது, இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது” என்று ஹாரிஸ் விளக்குகிறார்.
சரி செய்வது எப்படி
குப்பை கொட்டப்படுவதை டடுப்பது, அதுவும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதை தடுப்பது மிக முக்கியம். அதே போல், வீட்டு கழிவுகளை கரையோரம் கொட்டப்படுவதையும் தடுக்க வேண்டும்.
உபரி நீரை கொண்டு செல்வது இந்த கால்வாயின் முக்கிய பங்காக இருப்பதால், ஓட்டேரி நல்லாவின் கரையோரம் உள்ள கட்டங்களில் செயலில் இருக்கக்கூடிய மழை நீர் சேகரிப்பை அமல் படுத்த வேண்டும்.
குப்பை போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். “சாக்கடை கழிவுநீர் வெளியேற பாதாள வடிகால் அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இயற்கையான கால்வாய்கள் அதிகப்படியான மழைநீரை மட்டுமே கொண்டு செல்வதை உறுதி செய்வதே முன்னோக்கி செல்ல ஒரே வழி.” என்கிறார் ஹாரிஸ்
பொது சுகாதாரத்தை பாதுகாக்க, டிரோன் மூலம் கொசு மருந்து தெளித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சுலபமான தீர்வாக இல்லாமல், பிரச்சனையின் மூலாதாரத்தை கண்டு களையும் வரை, இங்குள்ள மக்களுக்கு தீர்வு அமையாது.
புகார் மீதான நடவடிக்கையாக, தூர்வாறும் பணி விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும், வரும் கவுன்சில் கூட்டத்தில், சுத்தப்படுத்துவதற்கான குறிப்பிட்ட பட்ஜட் ஒதுக்கப்படும் என வார்ட் 101-ந் கவுன்சிலர் மெடில்டா கோவிந்தராஜ் தெரிவித்தார்.
பொது பணித்துறையின் அதிகாரி இதையே கூறினாலும், ஓட்டேரி நல்லாவின் பிரச்சனையை களையும் விரிவான திட்டம் எதையும் தெரிவிக்கவில்லை.
[Read the original article in English here.]