Translated by Sandhya Raju
செப்டம்பர் 12, 2021 அன்று பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் அங்கீகாரமற்ற பதாகை சாய்ந்ததில் அவ்வழியாக தனது வாகனத்தில் சென்ற 23 வயது ஆர் சுபஸ்ரீ பலியாகி இரண்டாண்டுகள் கடந்து விட்டன. சென்னை உயர்நீதிமன்றம் அப்போதைய அதிமுக ஆட்சியை கடுமையாக சாடியது. இரண்டு ஆண்டுகள் பிறகு, ஓஎம்ஆர், ஜிஎஸ்டி, தாம்பரம், வேளாச்சேரி என பல பகுதிகளில் மீண்டும் விளம்பர பதாகைகள் சாலை நடுவிலும், நடை பாதைகளிலும் முளைத்திருப்பதை காண முடிகிறது.
“இன்னும் எத்தனை லிட்டர் இரத்தத்தை சாலைகள் பார்க்க வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என கடுமையான கேள்வியை உயர்நீதி மன்றம் அப்போது எழுப்பியது. அங்கீகாரமற்ற பதாகைகள், பானர்களை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு பல முறை கூறியுள்ளது எங்களுக்கு அலுத்து விட்டது எனவும் குறிப்பிட்டிருந்தது. வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அரசியல் கட்சிகள் பதாகைகள் வைக்கக்கூடாது என டிசம்பர் 2018 அன்று ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது.
நகராட்சியும், காவல் துறையும் பதாகைகள் விதிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை என கண்டறியப்பட்ட பின் 2018 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதை தொடர்ந்து, திமுக மற்றும் அதிமுக விதிகளை கடைப்பிடிப்போம் என உறுதி அளித்தது.
இதன் பிறகு அரசியல் கட்சிகளின் பதாகைகள் குறைந்திருந்தாலும், அங்கீகாரமில்லாத விளம்பர பதாகைகள் நகரத்தில் இன்னும் காணப்படுவது ஏன் என அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன் உட்பட பல சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
சட்டத்துக்கு உட்பட்ட Vs உட்படாத பதாகைகள்
சென்னை நகர மாநகராட்சி சட்டம் மற்றும் சென்னை நகர மாநகராட்சி பதாகைகள் மற்றும் விளம்பர வரி சட்டம், 2003 ஆகியவற்றின் விதிமுறைகள் கடைபிடிக்கப்படாவிட்டால், அந்த பதாகைகள் சட்டத்திற்கு புறம்பானது எனப்படும்.
பின் கூறப்பட்டுள்ள சட்டத்தின் படி, பதாகைகள் அமைக்க கீழ் கொடுக்கப்பட்டுள்ள இடங்களில் அனுமதி அளிக்கப்படாது.
- கல்வி நிறுவனங்கள், பிரபலமான வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உள்நோய் சிகிச்சை வசதிகளுடன் உள்ள மருத்துவமனைகள் ஆகியவை முன்புறம்
- சாலை திருப்பங்கள், சாலை சந்திப்புகளின் இரு புறமும் 100 மீட்டர் வரை.
- பழமை வாய்ந்த அல்லது முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள்.
தற்போதைய விதிகளின் படி, மாநகராட்சியின் அனுமதியோடு, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே பதாகைகள் வைக்க அனுமதி உண்டு என வருவாய் மற்றும் நிதி, துணை ஆணையர், விஷு மகாஜன், IAS தெரிவித்தார். தனியார் இடங்களில் பதாகைகள் வைக்க அனுமதியில்லை. சென்னை நகர மாநகராட்சி சட்டத்தின் 2018 ஆம் ஆண்டின் திருத்தத்தைத் தொடர்ந்து இந்த விதி அமலுக்கு வந்தது.
“இதற்கு முன், தனியார் அல்லது பொது இடங்கள் இரண்டிலும் உரிய அனுமதி பெற்று பதாகைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் சட்ட திருத்தத்திற்கு பின், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே, அதுவும் டெண்டர் கோரி அதன் மூலம் மட்டுமே பதாகைகள் வைக்க அனுமதிக்கப்பட்டன.” என விளக்கினார் மகாஜன். பேருந்து நிலையத்தில் விளம்பர போர்ட் வைக்க, டெண்டர் மூலம் விளம்பர நிறுவனங்களுக்கு உரிமை அளிக்கப்படுகிறது. டெண்டர் வென்ற நிறுவனம் மூலம் மட்டுமே இங்கு விளம்பர போர்ட் வைக்க முடியும்.
ஆனால், இந்த விதிமுறைகளை மீறி, தனியார் நில உரிமையாளரிடம் உள்ள “நல்லுறவு மற்றும் ஒப்புதலோடு” பதாகைகளை வைக்கிறோம் என பெயர் குறிப்பிட விரும்பாத சென்னை விளம்பர நிறுவன மேலாளர் கூறினார்.
கடந்த சில வருடங்களாக, மாநகராட்சியிடமிருந்து ஒப்புதல் பெறுவது மிகுந்த சிரமமாக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், தனியார் நில உரிமையாளரின் ஒப்புதலோடு தனியார் இடங்களில் பதாகைகள் வைப்பது எளிதாகிறது எனவும் அவர்களுக்கு “சரியாக வாடகை மட்டும் செலுத்தினால் போதும்” என மேலும் கூறினார். பிற விளம்பர நிறுவனங்களும் இந்த முறையையே கடைப்பிடிக்கின்றன.
யார் கண்காணிக்கிறார்கள்?
செப்டம்ப்ர் மாத தொடக்கத்தில், அங்கீகாரமற்ற பதாகைகள் உள்ள பகுதிகளை அடையாளம் காண மாநகராட்சி ஒவ்வொரு மண்டலத்திலும் பல்வேறு குழுக்களை உருவாக்கியதாக மகாஜன் கூறினார். “பல்வேறு பகுதிகளிலுள்ள அங்கீகாரமற்ற பதாகைகள் அடையாளம் கண்டு அவற்றை அகற்றவும் குழுவிற்கு தெரிவித்துள்ளோம்”
இது போன்ற குழுக்கள் தேர்தலின் போது கட்சிகள் தேர்தல் நெறிமுறைகளின் படி செயல்படுவதை உறுதி செய்ய செயல்பட்டன, அதே குழுக்கள் தற்போது அங்கீகாரமற்ற பதாகைகளை அகற்ற செயல்படும். இதற்கு முன் பொது இடங்களில் வைக்கப்படும் அங்கீகாரமற்ற பதாகைகளை நீக்க தொடர் முயற்சிகள் இல்லை.
நடவடிக்கைகள் குறித்து கேட்ட போது பதாகைகள் அகற்றல் முதல் அபாரம் விதித்தல் என இதற்கு ஏற்கனவே செயல்முறை வகுக்கப்பட்டுள்ளது என மகாஜன் தெரிவித்தார். “பதாகைகளுக்கு ₹25000 வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை, பேனர்களுக்கு ₹15000 வரை அபராதம் மற்றும் ஒரு வருடம் வரை சிறை என விதி உள்ளது. ஆனால் இது வரை அபராதம் வசூலிக்கப்படவில்லை, மாநகராட்சி பதாகைகளை அவ்வப்போது அகற்ற மட்டுமே செய்தன.
Read more: Dear Chennai politicians, here’s what you ruined for me…and yourself!
ஊழல் அமைப்பு
பதாகைகள் நிறுவல் செயல்முறை முழுவதிலும் ஊழல் நிறைந்துள்ளதாக ஜெயராம் வெங்கடேசன் கூறுகிறார். அரசியல் பதாகைகள் போலில்லாமல், விளம்பர பதாகைகளில் வருமானம் உள்ளது. “அங்கீகாரமற்ற பதாகைகளை நீக்குவது மாநகராட்சியின் கடமையாகும் ஆனால் இதனை அமல்படுத்த வேண்டிய அதிகாரிகள், விளம்பர நிறுவனத்தின் சம்பள பட்டியலில் உள்ளனர், இவர்களுக்கு மாதாமாதம் கமிஷன் செல்கிறது” என குற்றம் சாட்டுகிறார் வெங்கடேசன்.
சென்னை நகர மாநகராட்சி சட்டம் மற்றும் சென்னை நகர மாநகராட்சி பதாகைகள் மற்றும் விளம்பர வரி சட்டம், 2003 படி, வசூலிக்கப்பட்ட விளம்பர வரியின் 25% தொகையை சென்னை மாநகராட்சியின் சொந்த வைப்பு கணக்கில், அடுத்த வருடத்தின் ஏப்ரல் – ஜூன் மாதத்திற்குள் வருடத்திற்கு ஒரு முறை செலுத்தவேண்டும். ஆனால், ஜிஎஸ்டி வரம்புக்குள் இது கொண்டுவரப்பட்டதால், விளம்பர நிறுவனங்கள் விளம்பர வரியை செலுத்த வேண்டியதில்லை, என மகாஜன் தெளிவு படுத்தினார். “தற்போது இரண்டு கட்டணங்களை மட்டுமே செலுத்துகிறார்கள்: நிலத்திற்கான வாடகை மற்றும் ஒரு சதுர மீட்டருக்கு உரிமக் கட்டணம்,” என மேலும் அவர் கூறினார்.
குரோம்பேட்டையில் வசிக்கும் சமூக ஆர்வலர் மற்றும் அறப்போர் இயக்கத்தின் மற்றொரு நிறுவனரான டேவிட் மனோகர் கூறுகையில் பல வழக்குகளில் குற்றவாளிகளுடன் காவல்துறையும் கைகோர்த்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர், என் வீட்டருகில் இருந்த அங்கீகாரமற்ற பதாகை குறித்து நான் காவல் துறையில் புகார் அளித்தேன், என் தொலைபேசி எண்ணை பதாகை ஒப்பந்தக்காரரிடம் காவல் துறை அதிகாரி கொடுத்துள்ளார். “நான் அலுவலகத்தில் இருந்த சமயம், என் வீட்டிற்கே வந்து அந்த ஒப்பந்தக்காரர், என் மனைவியை மிரட்டினர்.” என் தன் அனுபவத்தை பகிர்ந்தார்.
அதிகார வரம்பில்லாத பொறுப்பு
சென்னை நகரம் சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்டது, ஆனால் ஓஎம்ஆர், பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை அல்லது வேளாச்சேரி பிரதான சாலை ஆகியவை அந்தந்த ஊராட்சிக்கு உட்பட்டதாக உள்ளது. தங்களுடைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விதிமுறைகள் மீறப்பட்டால், அது கவனிக்கப்படுவதில்லை என மனோகர் கூறுகிறார். “தங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் கட்டுப்பாடு இல்லை, அது மாவட்ட ஆட்சியரின் அதிகாரத்தின் கீழ் வருகிறது” என்ற பதிலே வருகிறது.
இந்த பொறுப்பு துறப்பு பல நேரங்களில் ஆபத்தாக அமைகிறது. “பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையின் பல இடங்களில் ஒரு கம்பு நடப்பட்டு பதாகைகள் போடப்படுகின்றன. பலமான காற்று வீசும் போது, இங்குள்ள மக்களுக்கு இது ஆபத்தாக முடிகிறது,” என்கிறார் மனோகர்.
இது போன்ற பல பதாகைகள் வலுவாக அமைக்கப்படுவதில்லை, இதற்கு யாரும் பொறுப்பும் எடுப்பதில்லை, இது ஆபத்தாக அமைகிறது என வெங்கடேசன் கூறினார்.
Read more: Banners and hoardings to be back on city streets, much to citizens’ dismay
தேவை: வலுவான கொள்கை மற்றும் உறுதி
இதற்கான தீர்வு அமைவதில் “அரசியல் உறுதி” முக்கிய பங்கு வகிக்கிறது என கூறும் வெங்கடேசன், பேனர்கள், பதாகைகள் வைக்கக்கூடாது என தனது கட்சியினருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதை வரவேற்கிறார். இது தீர்க்கமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் கூறுகிறார். “அரசியல் உறுதி, விதிகளை மீறுபவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைள் ஒரு எச்சரிக்கையாக அமையும்.”
பதாகைகள் விதிமுறைகள் குறித்த வெளிப்படைதன்மை மற்றும் தெளிவு தரப்படவேண்டும் என டேவிட் மனோகர் கூறுகிறார். இதற்கு பதிலளிக்கும் மகாஜன், பதாகைகள் வைக்க தேவையான உரிமம், அளவு, விவரக்குறிப்புகள் குறித்த நெறிமுறைகள் சென்னை நகர மாநகராட்சி சட்டம் மற்றும் சென்னை நகர மாநகராட்சி பதாகைகள் மற்றும் விளம்பர வரி சட்டம், 2003 பிரிவு 326 முதல் கொடுக்கப்பட்டுள்ளது என தெளிவு படுத்துகிறார்.
மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே பதாகைகள் அனுமதி என்று 2018 கொண்டு வரப்பட்ட சட்ட திருத்ததை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தை சென்னை ஹோர்டிங் அமைப்பு மற்றும் பிற அமைப்புகள் மனு அளித்தன. இந்த திருத்தம் பாரபட்சமானது என்றும் அரசயிலமைப்பின் சமத்துவ கொள்கைக்கு புறம்பானது என்றும் குற்றம் சாட்டினர், மேலும் தங்களுடைய சொந்த நிலத்தின் மூலம் வருவாய் ஈட்டுவதை அனுமதிக்க வேண்டும் என கூறினர்.
இந்த சட்டத்தை நிராகரித்து, தனியார் நிலத்தில் பதாகைகள் எழுப்ப உரிமத்திற்கு விண்ணப்பிக்கலாம் என நீதிமன்றம் கூறியது. தனியார் நில உரிமையாளர்களின் வருவாய் ஈட்டும் அடிப்படை உரிமையை இது பறிப்பதாகும் என நீதிமன்ற அறிக்கையை தி இந்து நாளிதழ் செய்தியாக வெளியிட்டது
2020 உயர் நீதிமன்ற ஆணைப்படி சென்னை நகர நகராட்சி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஏற்கனவே மாநகராட்சி திட்ட வரைவை ஏற்படுத்தியுள்ளதாக மகாஜன் தெரிவித்தார். “திட்ட வரைவு தற்போது மாநகராட்சியின் சட்டத்துறையின் பார்வைக்குள்ளது” என் மேலும் தெரிவித்தார்.
அங்கீகாரமில்லாத அல்லது ஆபத்தான நிலையிலுள்ள பதாகைகளை கண்டால், புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி தன் டிவிட்டர் பக்கத்தில் 1913 என்ற அதாற்கான எண்ணை செப்டம்பர் 8 அன்று பகிர்ந்துள்ளது. இது வரை 20 அங்கீகரிக்கப்படாத பதாகைகள், 83 ஃபிளக்ஸ் பேனர்களை நீக்கியுள்ளதாக மேலும் டிவிட்டர் பதிவில் மாநகராட்சி பதிவிட்டுள்ளது.
[Read the original article in English here.]