Translated by Sandhya Raju
“எனக்கு ஒரு வீடு வேண்டும்,” என்கிறார் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனஸ்ரீ. “கதவு வைத்த கழிப்பறை, கால் நீட்டி தூங்கக்கூடிய அளவிலான ஒரு அறை மற்றும் ஒரு சமையலறை,” என மேலும் அவரது விருப்பத்தை கூறுகிறார். இது அவர் கனவு மட்டும் இல்லை, கண்ணப்பர் திடலில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்களின் விருப்பமும் ஆகும். இவர்கள் இருபது ஆண்டுகளுக்கு முன் ரிப்பன் மாளிகை அருகில் உள்ள தெருக்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.
ஆக்கிரமிப்பு, நீதிமன்ற ஆணை, வளர்ச்சி திட்டங்கள் என பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, சென்னையில் ஆக்கிரமிப்பு அகற்றல் அமல்படுத்தப்படுகிறது.
பல வருடங்களாக வசித்த இருப்பிடங்களை விட்டு சென்னையின் புறநகர் பகுதிகளில் இவர்கள் வசிக்கின்றனர். இந்த வெளியேற்றம் இவர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை உருவாக்குகிறது, ஆனால் இதைப் பற்றி அதிகாரிகள் அதிகம் அக்கறை கொள்வதில்லை.
Read more: Life beyond the murals in Chennai’s Kannagi Nagar
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்
சென்னையின் பிஸியான பகுதியான சென்ட்ரல் ரயில் நிலையம், மற்றும் மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகை ஆகியவற்றிர்கு ஒரு கி.மீ தொலைவில், , மிக முக்கியமான அடையாளமாக திகழ்கிறது ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம். இதன் அருகில் உள்ள வணிக வளாக கட்டிடத்தின் அருகே உள்ள சிறு சந்து, முற்றிலும் மாறுபட்ட காட்சியை காட்டுகிறது.
விளையாட்டு நிகழ்ச்சிகள், வளர்ச்சி திட்டங்கள் ஆகியவற்றிற்கு தடையாக உள்ளதாக 2002-ஆம் ஆண்டு, இங்கு வசிக்கும் 62 குடும்பங்களை சென்னை மாநகராட்சி வெளியேற்றியது.
மூன்று மாதங்களுக்குள் மாற்று வீடு அமைத்து தரப்படும் என அரசு உறுதி அளித்து, தெற்கு ரயில்வே சரக்கு ஷெட்டில் வேலை செய்யும் தொழிலாளிகள் கட்டிடத்தில் தற்காலிகமாக இவர்களை குடியமர்த்தியது. ஆனால், இதுவே நிரந்தரமாகி, கடந்த இருபது வருடங்களாக இவர்களின் வசிப்பிடமாக உள்ளது.
50 வயதாகும் செல்வம் தன் குடும்பத்துடன், ராஜா முத்தையா சாலையோரம் பல வருடங்களாக வசித்து வந்தார். அன்றாடம் கிடைக்கும் கூலி வேலையை பார்த்து இவர்கள் தங்களின் வாழ்க்கையை ஓட்டினர். 2002-ம் ஆண்டு, மூன்று மாதத்திற்குள் ஜுட்காபுரத்தில் மாற்று இடம் அளிப்பதாக கூறி இவர்களை மாநகராட்சி வெளியேற்றியது.
“எங்களுக்கு வீடு அமைத்து தருவதாக கூறிய இடத்தில் தற்போது, தனியார் குடியிருப்பு வந்துள்ளது. கேபி பார்க்கில் கட்டிட அஸ்திவாரம் அமைக்கும் நேரத்தில் கூட, ஆட்சியாளர்கள் எங்களுக்கு வீடு வழங்கப்படும் என உறுதி அளித்தனர். இருபது வருடங்கள் கடந்து விட்டன, ஆட்சி மாறிவிட்டது, 62 குடும்பங்கள் தற்போது 128 குடும்பங்களாக வளர்ந்துள்ளது, ஆனால் இன்றும் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தில் தான் நாங்கள் வசித்து வருகிறோம்.” என்கிறார்.
கண்ணப்பர் திடலில் பரிதாப வாழ்க்கை நிலை
சந்தின் நுழைவாயிலில், மூன்று பேர் கொண்ட குடும்பம் கட்டிலில் அமர்ந்திருந்தனர், வீட்டு கூரை தார்பாலின் பாயால் மூடப்பட்டிருந்தது. “இது தான் எங்கள் வீடு”, என்றனர்.
பள்ளி சீருடையில் இருந்த குழந்தைகள், அருகிலுள்ள குழாயிலிருந்து பிளாஸ்டிக் குடத்தில் தண்ணீர் நிரப்புவதை காண முடிந்தது. பிளைவுட், தார்பாலின் கொண்டு அமைக்கப்பட்ட கூரை வீடுகளை அங்கு காண முடிந்தது. போதிய இடம் இல்லாதவர்கள் இந்த ஏற்பாட்டை அமைத்திருந்தனர்.
சிறிய சந்தின் முடிவில் உள்ள கட்டிடத்தில் வீடற்றவர்களுக்கான இடம் உள்ளது. ஒரு சிறிய அறையை நம்மிடம் காண்பித்து , “நான்கு பெரியவர்கள், ஒரு குழந்தை வசிக்கும் இடம் இது” என ஒரு சிறிய கட்டில் போடப்பட்டுள்ள அறையை நம்மிடம் காண்பித்தார் செல்வம்.
இதே கட்டிடத்தில் ஒரு சிறிய ஹாலில் நிறைய குடும்பங்கள் வசிக்கின்றன. “ஒரு சின்ன அறையில் எட்டு குடும்பங்கள் வசிக்கின்றன,” என்கிறார் மாரியம்மா. “ஒரு குடும்பம் சமைத்த முடித்த பின்னரே நான் சமைக்க முடியும். இங்குள்ள ஆண்கள் வெளியே சென்ற பின்னரே நாங்கள் உடை மாற்ற முடியும். இங்கு கழிப்பறை, குளியலறை வசதி இல்லை. வீட்டின் ஒரமாக உள்ள திறந்த வெளியில் தான் குளியலுக்கு பயன்படுத்துகிறோம்,” என்று அங்கு வசிக்கும் நிலையை விவரித்தார்.
மோசமான சுகாதாரம் காரணமாக பல குழந்தைகளுகு அடிக்கடி நோய்வாய்ப்படுகின்றனர். முறையான குப்பை சேகரிப்பும் இங்கு இல்லை.
மழை காலத்தில் கட்டிடத்தில் தண்ணீர் ஒழுகுவதால் தூங்க முடியாது. எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழுக்கூடும் என அச்சத்திலேயே இங்கு வசிக்கின்றனர்.
சமூக பிரச்சனைகள்
கண்ணப்பர் திடலில் வசிக்கும் பெண்கள் கூடுதலாக பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.
“மாதவிடாய் காலத்தில் இங்கு வசிப்பது மிகவும் கடினம். கட்டிடத்தின் பின் உள்ள திறந்த வெளியை தான் கழிப்பறையாக உபயோகிக்கிறோம். இங்கு பல வெளியாட்காள் சமொக விரோத செயல்களுக்கு இந்த இடத்தை பயன்படுத்துகின்றனர், அதனால் இங்கு தனியாக செல்வது பாதுகாப்பில்லை.” என் கிறார் ஒன்பதாவது படிக்கும் ஐஸ்வர்யா.
போதிய இட வசதி இல்லாதது, பல இளம் பெண்கள் மற்றும் ஆண்களை இள வயது திருமணத்திற்கு தள்ளுகிறது. 18 வயதிலேயே பல பெண்கள் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கும் தாயாகி விடுகிறார்கள். குறுகிய இடத்தில் அவர்கள் குழந்தைகளை வளர்க்க சிரமப்படுவதால், இளம் வயதிலேயே திருமணத்தை முடித்து விடுகிறார்கள்.
படித்த இளைஞர்கள் சரியான வேலையில்லாமல் சிரமப்படுகிறார்கள். இதனால், தீய பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள் அல்லது தற்கொலை முடிவை எடுக்கிறார்கள்.
“இங்கு பல பெண்கள் கணவரை இழந்தவர்கள். அருகில் உள்ள மார்க்கெட்டில் பூ விற்போம். ஒரு நாளைக்கு ₹100-₹150 சம்பாதிக்கிறோம், இதை வைத்து தான் சமாளிக்கிறோம்”, என்கிறார் மாரியம்மா.
இவர்கள் பெறும் ஒரே நன்மை, இந்த இருப்பிடத்தை ஆதாரமாக கொண்டு ரேஷன் பொருட்கள் பெறவும் வாக்குரிமை பெறவும் உதவுகிறது.
“எந்த அரசியல் கட்சியை சேர்ந்தவர்களானாலும், புது வீடு கட்டி தருவதாக உறுதி அளிக்கிறார்கள். ஆனால், இந்த 20 வருடத்தில் எதுவும் மாறவில்லை,” என்கிறார்கள் கண்ணப்ப திடலில் வசிப்பவர்கள்.
Read more: Eviction in Govindasamy Nagar highlights precarious life of Chennai’s poor
மாற்றத்திற்கான உறுதிமொழி
எட்டு மாதம் முன், சட்ட மன்ற உறுப்பினர் முன்னிலையில் அரசு அதிகாரிகள் மேற்கொண்ட கணக்கெடுப்பு மட்டுமே இப்போது இவர்களுக்கு உள்ள ஒரே நம்பிக்கையாக உள்ளது.
எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஐ பரந்தாமன் கூறுகையில் “தேர்தலில் வெற்றி பெற்றதும், தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் அந்த இடத்தை பார்வையிட்டோம். இதே இடத்தில் பலர் சாலையோரம் வசிக்கின்றனர். கண்ணப்பர் திடலில் உள்ள 100 குடும்பங்கள் உட்பட 484 குடும்பங்களின் கணக்கெடுப்பை எடுத்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் இதே இடத்தில் வீடு கட்டிக் கொடுக்க திட்டமிட்டுள்ளோம்.”
நாம் சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியதை தொடர்ந்து, செப்டம்பர் 28 அன்று கண்ணப்பர் திடலில் உள்ள மக்களுக்கு பயோமெட்ரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
பல வருடங்களாக, பல அதிகாரிகள் மாற்றம் ஆனதில், தற்போது உள்ளவர்களால் இந்த 20 வருட தாமத்திற்கு என்ன காரணம் என கூற முடியவைல்லை. இருப்பினும், கடந்த இருபது வருடங்களாக திமுக, அதிமுக மாறி மாறி ஆட்சியில் இருந்ததில், இவர்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்க வேண்டும். “கடந்த காலங்களில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என எனக்கு தெரியாது, ஆனால் இவர்களுக்கு சரியான வீடு அமைத்துக் கொடுக்க முனைப்புடன் உள்ளேன்”, என்கிறார் பரந்தாமன்.
பயோமெட்ரிக் கணக்கெடுப்பு குறித்து, தாழ்த்தப்பட்ட நகர்ப்புற சமூகங்களுக்கான தகவல் மற்றும் வள மையம், நிறுவனர் வனேசா பீட்டர் கூறுகையில், “வெளியேற்றப்பட்ட மக்களை சுமார் இரண்டு தசாப்தமாக இந்த இடத்தில் தங்க வைத்துள்ளது மனித உரிமை மீறல் ஆகும். அரசு தற்போது இவர்களின் பிரச்சனையை கையிலேடுத்து, வீடு வழங்க திட்டமிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அதே சமயம், இவர்களுக்கு இந்த இடம் அருகிலேயே வீடு அமைத்துக் கொடுத்து அவர்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.”
“வெளியேற்றம் என்பது மனித வாழ்க்கை சார்ந்த பிரச்சனை எனபதால் மனிதத்துடன் இதை அணுக வேண்டும்,” என 2015-ம் ஆண்டு உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால்,பல வாக்குறுதிகள் மீறப்பட்டு, கண்ணப்பர் திடலில் நடந்தது இதற்கு முற்றிலும் மாறானதாக வாழ தகுதியற்ற இடமாக உள்ளது.
இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ், வாழ்விடம் அடிப்படை உரிமை என கூறப்பட்டிருந்தாலும், இது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருந்தாது என்பதையே இந்த மக்களின் நீண்ட காத்திருப்பு காட்டுகிறது.
[Read the original article in English here.]