Translated by Sandhya Raju
கண்ணகி நகரில் வாகன போக்குவரத்தற்ற குறுகிய தெருவில், ஐந்து வயது குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவனை விட வயதில் பெரிய சிறுவர்களின் குழுவுடன் கிரிக்கெட் விளையாடுகிறான். மதிய உணவுக்காக அனைவரும் கலைந்து செல்ல, குமார் மட்டும் தனியாக அங்கயே இருக்கிறான். தெரு ஓரத்தில் உள்ள பெஞ்சில் அமர்ந்து, அடுத்து விளையாட யாரேனும் வருவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கிறான். சாப்பிட போகவில்லையா என கேட்டால் “பசி இல்லை” என்கிறான்.
ஆனால், உண்மை அதுவல்ல – வீட்டில் நல்ல உணவு இல்லை என்பதே உண்மையான காரணம். சென்னையில் பொதுமுடக்கம் தொடங்கியது முதல் குமார் மதிய உணவு இல்லாமல் இருக்கிறான். பொதுமுடக்கத்திற்கு முன், 23ம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தில் தான் அவன் மதிய உணவு உண்டான். அவனுக்க பிடித்த சாம்பார் சாதம் முட்டையுடன் அல்லது காயுடன் அங்கே பரிமாறப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக ஆசிரியர் இல்லாமல் மூடியே உள்ளது.
தினமும் மதியமானால், அவனின் அம்மா அவனை வலுக்கட்டாயமாக வீட்டிற்க்கு அழைத்து செல்ல வேண்டும். “அவ்வளவாக சாப்பிடுவதில்லை. பொதுமுடக்கத்தால் பார்த்து வந்த வீட்டு வேலையும் போனதால் கையில் பணம் இல்லை. பெரும்பாலான நாட்களில் ரசம் செய்வதால் அவனுக்கு அதில் விருப்பமில்லை. அங்கன்வாடியில் உண்டது போல் முட்டை, பருப்பு, காய்கறி ஆகியவற்றை வாங்கும் நிலை இல்லை” என தன் நிலையை விளக்குகிறார்.
‘பள்ளியில் தரப்படும் தக்காளி சாதத்தை மிஸ் செய்கிறேன்’
எண்ணூர் அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் கே சுரேந்தர் அவ்வளவாக சாப்பிடுவதில்லை. வீட்டில் பெரும்பாலும் ரசம், காரக்கொழம்பு தான். கோவிட்-19 ஆல் அவன் அம்மா வேலை இழந்துள்ளதால், அரிசி வாங்கக் கூட சிரமப்படுகிறார்கள்.
“பள்ளியில் தரப்படும் தக்காளி சோறை மிஸ் செய்கிறேன்,” என வருத்தத்தோடு சொல்கிறான் சுரேந்தர்; பெரும்பாலும் பசியுடனே தூங்கச் செல்கிறான். மதிய உணவு திட்டத்தின் கீழ் தரப்படும் சத்தான உணவை, சுரேந்தர் போன்ற பெரும்பாலான ஏழை குழந்தைகள் தற்போது இழந்துள்ளனர்.
ஆறு முதல் ஐம்பத்தி ஒன்பது மாதங்கள் வரை உள்ள 48.6% நகர்புற குழந்தைகளுக்கு இரத்த சோகை உள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட 25.5% குழந்தைகள் போதிய வளர்ச்சியின்றியும், 21.5% குழந்தைகள் குறைவான எடையுடனும் உள்ளனர். கோவிட் தொற்று முன்பே, சென்னை உட்பட தமிழகத்தின் நகர்புறத்தில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டை 2015-16 ஆண்டின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
“அங்கன்வாடி மையங்கள், மதிய உணவு திட்டம் ஆகியவை நடைமுறையில் உள்ள போதே இந்த அவல நிலையை ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது. மூன்று மாதங்களாக அங்கன்வாடி மையங்கள் மூடிக்கிடக்கும் நிலை இந்த சூழலை மேலும் மோசமாக்குவதோடு, ஏழை குழந்தைகளும் இதனால் பாதிக்கப்படுவார்கள்.” என்கிறார் லயோலா கல்லூரியில் இயங்கும் குழந்தைகள் பாதுகப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆன்ட்ரூ ஜேசுராஜ்.
ஊட்டச்சத்து குறைபாடு ஒரு காணப்படாத பக்க விளைவு
குமார், சுரேந்தர் போன்ற ஆயிரக்கணக்கான சென்னை நகர ஏழை குழந்தைகளின் நிலை இது தான். அங்கன்வாடி மையங்களும், மதிய உணவு திட்டமும் இந்த குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன; பருப்பு, பச்சை காய்கறிகள், முட்டை ஆகியவை இங்கு மட்டும் தான் இவர்களால் உண்ண முடிகிறது. பொது முடக்கத்தால் இவை மூடியுள்ளதால், மாதக் கணக்கில் சரியான ஊட்டச்சத்தின்றி இந்த குழந்தைகள் உள்ளனர்.
காய்கறிகள் அல்லது கீரை, முட்டை, கொண்டை கடலை, சோயா பீன்ஸ் ஆகியவற்றுடன் அரிசி பிரதான மெனுவாக அங்கன்வாடிகளிலும், மதிய உணவு வழங்கும் பள்ளிகளிலும் கொடுக்கப்படுகிறது. சிறு குழந்தைகளின் ஆரம்பக்கட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தும் அங்கன்வாடி மையங்களில் சத்து மாவு கஞ்சியும், நார்ச்சத்து நிறைந்த சிற்றுண்டிகளும் அளிக்கப்படுகிறது, சுரேந்தர் போன்ற பதின்பருவத்தினரின் வளர்ச்சியில் மதிய சத்துணவு முக்கிய பங்கு வகிக்கிறது.
“மதிய உணவாக அரிசி சோறு, காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் அங்கன்வாடியில் வழங்கப்படுகிறது. மாலை 3 30 மணிக்கு வீட்டிற்க்கு செல்லும் போது முட்டை அல்லது கொழுக்கட்டை சிற்றுண்டியாக வழங்கப்படுகிறது,” என்கிறார் IRCDUC வின் ஏ டி நுடினை. “அங்கன்வாடியில் வழங்கப்படும் உணவின் சுவை மற்றும் தரம் குறித்து கேள்விகள் எழுந்தாலும், ஏழை குழந்தைகளுக்கு தினத் தேவையான புரதம் மற்றும் பல வைட்டமின் சத்துகளை இவை அளிக்கிறது,” என மேலும் அவர் தெரிவித்தார்.
அமைப்பில் உள்ள சவால்கள்
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், பின்தங்கிய நகர சமூகங்களுக்கான தகவல் மற்றும் வள மையம் (IRCDUC) நடத்திய ஆய்வின் படி, சென்னையில் உள்ள இரண்டு முதல் ஐந்து வயது வரையான 54% வீடில்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள் தான் முக்கியமான ஊட்டச்சத்து வழங்கும் மையமாக உள்ளது என தெரிவித்துள்ளது. நகரத்தின் வீடற்ற குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சுகாதார நெருக்கடியைப் சந்திக்கின்றனர் என தெரிகிறது.
ஆனால் நெருக்கடியின் விகிதாச்சாரம் உண்மையில் இதை விட பெரியது. குடிசைகள் மற்றும் மீள்குடியேற்ற காலனிகளில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடியால் பயன் பெறுகின்றனர், ஆனால் மிக அதிக தேவை உள்ள வீடில்லா குழந்தைகளுக்கு இதன் பயன் சென்றடையவில்லை – இவர்களில் 46% குழந்தைகள் அங்கன்வாடி மையங்களுக்கு சென்றதில்லை.
சரசா போன்ற 40 குடும்பங்கள் பாரீஸ் கார்னரில் உள்ள என் எஸ் சி போஸ் சாலையை அவர்கள் வீடாக்கியுள்ளனர். சரசாவின் ஆறு பேரக் குழந்தைகளும் இது வரை அங்கன்வாடி சென்றதில்லை. காரணம்: அருகாமையில் ஒரு அங்கன்வாடி மையமும் இல்லை. “பாரீஸ் கார்னர், பிராட்வே போன்ற வணிக பகுதிகளில் வெகு சில அங்கன்வாடி மையங்களே உள்ளது,” என்கிறார் சமூக பணியாளர் வனேசா பீட்டர்.
மே மாதத்தில் மாம்பழம், ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் விநாயகர் சிலை என பருவ காலத்திற்கேற்ப சரசா வணிகம் செய்வார். சில நேரங்களில் வாகன ஓட்டிகள், வழிப்போக்கர்கள் அவ்வப்பொழுது பணம், ஸ்னாக் தருவார்கள், இல்லையென்றால் சரசாவின் சொர்ப்ப சம்பாத்தியத்தில் தான் சமாளிக்க வேண்டும்.
“சாதம், ரசம், மோர் தவிர வேறு எதுவும் கொடுக்க முடியாவிட்டாலும், வயிறு நிரம்புமாறு பார்த்துக்கொள்வேன்,” எனும் சரசா, மூன்று மாதமாக வேலையில்லாமல் இருக்கிறார். தொண்டு நிறுவனங்கள் தரும் உணவு பொருட்களை கொண்டு சமாளிக்கின்றனர். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், சரசாவின் பேரக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவு தற்போது கிடைப்பதில்லை.
சமூக நலத்துறை இந்த சவால்களை அறிந்து கொண்டு, கோவிட் பிறகான காலத்தில், இந்த வீடற்ற குழந்தைகள் பலவீனமானவர்களாகவும், நோய்க்கு ஆளாகக்கூடியவர்களாகவும் வளரக்கூடாது என்பதை உறுதிப்படுத்த செயல்பட வேண்டும் என கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஊட்டச்சத்து குறைபாடு குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. கோவிட்-19 தொற்று அவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளதால், குழந்தைகள் ஊட்டச்சத்து நிறைந்த உணவை உண்ண வேண்டும். வளரும் பருவத்தில் மல்டி வைட்டமின் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைபாடு இருந்தால், மூளை மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கும்.
டாக்டர் ரவி குமார் தம்பிதுரை, மூத்த ஆலோசகர், குழந்தை தீவிர சிகிச்சை பிரிவு, ரேலா இன்ஸ்டிடூட்
இந்த மூன்று மாத ஊட்டச்சத்து குறைபாடே, குழந்தைகளின் வளர்சியை பாதித்திருக்கும். இனிமேலும் தாமதிக்காமல் மாநில அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளாவில் கடைப்பிடிப்பது போல் அங்கன்வாடி ஊழியர்கள் அரிசி, சத்துமாவு மற்றும் பருப்பு வகைகளை இந்த குடும்பங்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும்.
அங்கன்வாடியில் எப்பொழுதும் உணவு பொருட்கள் இருப்பு இருக்கும். இவை குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.” என ஸ்ரீபெரும்பதூரில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை மையத்தின் அலுவலகர் ஒருவர் தெரிவித்தாலும் கள நிலவரம் வேறாகவே உள்ளது.
பெரும்பாலான அங்கன்வாடி மைய ஊழியர்கள் பொது இடங்களை கிருமி நீக்கம் செய்யவும், வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் வேலையிலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். “விநியோகம் செய்ய இயலாததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன – நாங்கள் கோவிட் வேலைகளில் ஈடுபட்டுள்ளோம், மற்றொன்று சிலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.” என்கிறார் அங்கன்வாடி பணியாளர் ஷீலா.
சென்னையில் வணிக பகுதிகளான பாரீஸ் கார்னர் போன்ற பகுதிகளில் அங்கன்வாடி மையம் இல்லாததற்கு இட தட்டுப்பாடே காரணம். கோவிட்-19 தொற்று சரியானதும், மொபைல் அங்கன்வாடி மையங்களை அமைக்கும் சாத்தியக்கூறுகளை சென்னை மாநகராட்சி முன்னெடுக்க வேண்டும். சரசா போன்ற பலர் தங்கள் வீட்டு குழந்தைகளை இம்மையங்களுக்கு அனுப்ப ஏதுவாக அமையும்.
[Read the original article in English here.]