Translated by Vadivu Mahendran
சென்னையின் மேம்பாலங்கள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் போன்ற பல தாமதிக்கப்பட்ட சாலைப் பணிகள் அதன் போக்குவரத்து நெரிசலை மோசமாக்கியதோடு நகரம் முழுவதும் பயண நேரங்களை அதிகரித்துள்ளன. நிலுவையில் உள்ள இத்திட்டங்களில் பல, இரண்டிலிருந்து மூன்றாண்டுகளுக்கு மேலாக தாமதப்படுத்தப்பட்டுள்ளன, அதிலும் சென்னை துறைமுகம்-மதுரவாயல் அதிவேக நெடுஞ்சாலைப் பணி பத்து வருட காலமாக நடைபெற்று வருவது அதிகபட்ச தாமதத்தின் வெளிப்பாடாகும். ஒவ்வொரு திட்டமும் நிலம் கையகப்படுத்தல், நிதி நெருக்கடி மற்றும் சட்ட சவால்கள் உள்ளிட்ட அதனதன் தடைகளை எதிர்கொண்டதனால் பயணிகள் மற்றும் குடியிருப்பவர்கள் நெரிசலற்ற சாலைகளுக்காகப் பல வருடங்கள் காத்திருக்கக் காரணமாகியுள்ளது.
வேளச்சேரி மேம்பாலம்
பணி துவக்கம்: ஜனவரி 2016
செலவு மதிப்பீடு: ரூ. 92 கோடி
திட்டத்தின் நோக்கம்: மாநகரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்டதும் நீண்ட நாள் நிலுவையிலிருப்பதுமான திட்டங்களில் ஒன்றுதான் வேளச்சேரி மேம்பாலத் திட்டம். அப்பகுதியிலுள்ள பயணிகள் மற்றும் குடியிருப்பவர்கள், அங்கு ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் உச்ச நெரிசல் நேரத்தை இலகுவாக்குவதோடு, ஜி.எஸ்.டி சாலை, தரமணி இணைப்பு சாலை மற்றும் வேளச்சேரி புறவழிச்சாலையினை அடைவதையும் இவ்விரட்டை மேம்பாலங்கள் சுலபமாக்குமென அதிக நம்பிக்கையுடன் இருந்தனர்.
திட்டத்தின் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம்: முட்டுக்கட்டையைத் தகர்க்க முடியாமல் இத்திட்டம் விஜயநகர் சந்திப்பு அருகே நிறுத்தம் கண்டிருக்கிறது. பல காலக்கெடுகள் கடந்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் சட்டப் போராட்டம் காரணமாக இந்த மேம்பாலம் நிலுவையில் உள்ளது. இந்த திட்டம் முடிவுக்கு வருவதைப்பற்றி தற்போது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் அந்த மேம்பாலம், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை மேலும் அதிகரித்ததோடு, பயண நேரத்தையும் அதிகரித்துள்ளது.
தாமதத்திற்கான காரணங்கள்: இத்திட்டமானது, நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைகள் காரணமாக தடைகளைச் சந்தித்துள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கு உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது, இதன் விளைவாக 2000 சதுர மீட்டர் நிலங்களை கையகப்படுத்தாமல் நெடுஞ்சாலைத் துறையால் வேலையைத் தொடர முடியவில்லை. தாமதத்தை ஏற்படுத்தும் பிற சிக்கல்களில் மெட்ரோ நீர் குழாய் இணைப்பை மாற்றுவதும் அடங்கும்.
மேடவாக்கம் மேம்பாலம்
பணி துவக்கம்: பிப்ரவரி 2016
செலவு மதிப்பீடு: ரூ. 146 கோடி
திட்டத்தின் நோக்கம்: இந்த 2.3 கி.மீ நீளமுள்ள மேம்பாலம், வேளச்சேரி-தாம்பரம் நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தளர்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது.
திட்ட விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம்: இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக, இந்த மேம்பாலம் பொதுமக்களுக்காகத் திறக்கப்படாது எனத் தெரிகிறது. சட்டரீதியான சவால்கள் கடந்த மே 2018 இல் இதன் கட்டுமானத்தை நிறுத்திடக் காரணமாகின. ஒரு வருடத்திற்குப் பிறகு மார்ச் 2019 இல் துவங்கிய கட்டுமானப் பணி, மீண்டும் சவால்களைச் சந்தித்ததின் விளைவாக மேலும் தாமதத்திற்கு உள்ளாகியது. மாநகரின் மேம்பாலங்களிலேயே மிக நீளமானதாகக் கருதப்படும் இந்த மேம்பாலம் இந்த வருடமாவது கட்டுமானம் முடிக்கப்பட்டு செயல்பட ஆரம்பிக்கும் என குடிமக்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
தாமதத்திற்கான காரணங்கள்: மேடவாக்கம் மேம்பாலமும் வேளச்சேரி மேம்பாலத்தைப் போல நிலம் கையகப்படுத்தல் குறித்த காரணத்தால் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. இந்தத் தாமதமானது, 50% பணி மட்டுமே நிறைவுற்றிருந்த சமயத்தில் நடந்த ஒப்பந்ததாரர்களின் மாற்றத்தால் மேலும் அதிகமானது,. இத்திட்டத்தை முதலில் ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் வேலையை முடிக்காததால், மாற்றம் நடந்ததாகவும் அத்துடன் அவரால் அப்பணியை நிறைவேற்ற முடியாமல் போனதற்கு நிதி பற்றாக்குறை காரணம் எனவும் கூறப்பட்டது.
கோயம்பேடு மேம்பாலம்
பணி துவக்கம்: பிப்ரவரி 2017
செலவு மதிப்பீடு: ரூ, 93 கோடி
திட்டத்தின் நோக்கம்: போக்குவரத்து நெரிசலைத் தளர்த்தி வாகனங்கள் சென்னை புறநகர் பேருந்து நிலையம் மற்றும் காளியம்மன் கோயில் போக்குவரத்து சிக்னல்களை கடப்பதை இலகுவாக்குவதே.
திட்ட விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம்: கட்டுமானப் பணி நிறைவடைந்த பின், இந்த மேம்பாலம் 1.13 கி.மீ நீளம் கொண்டதாக இருக்கும். இது, மார்ச் 2019 ல் நிறைவுறுவதாக இருந்தது ஆனால் ஏற்பட்ட தாமதங்கள் காலக்கெடு முடிந்த பின்னரும் அது செயல்பாட்டில் இல்லையென்பதைக் குறிக்கிறது. இந்தத் தாமதமானது, ஜவஹர்லால் நேரு சாலையில் அடிக்கடி காணப்படும் போக்குவரத்து நெரிசலையும் மற்றும் அதனால் பயண நேரத்தில் 15-20 நிமிடங்கள் அதிகரிப்பையும் ஏற்படுத்துகிறது. சென்னை புறநகர் பேருந்து நிலையம் அங்கிருப்பதனால், அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் அந்த சாலையைப் பயன்படுத்துவதும் போக்குவரத்து நெரிசலை இன்னும் மோசமாக்குகிறது. மேற்கொண்டு எந்த ஒரு தாமதமும் ஏற்படாத பட்சத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பணி நிறைவடையும் என அதிகாரிகள் எதிர்பார்ப்பதாக கடந்த ஆண்டின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தாமதத்திற்கான காரணங்கள்: கட்டுமானப் பொருட்களை வாங்குவதிலும், நிறுவனங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் போக்குவரத்து காவல்துறையினரிடம் அதிக நேரம் கட்டுமானப் பணியை மேற்கொள்ள அனுமதி பெறுவது ஆகிய காரணங்களினால் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன. பகலில் கடும் வாகன இயக்கம் இருந்ததாலும் அதனால் இரவில் மட்டுமே மேம்பால பணிகளை மேற்கொள்ள முடிந்தது என்பதும் தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணமாகும். சாலையை மூடுவதற்கான அனுமதியும் மிகக் குறைந்த நேரத்திற்கே வழங்கப்பட்டதால், கட்டுமான செயல்பாட்டின் போது சிரமங்கள் ஏற்பட்டது.
பல்லாவரம் மேம்பாலம்
பணி துவக்கம்: 2015
செலவு மதிப்பீடு: ரூ. 83 கோடி
திட்டத்தின் நோக்கம்: சந்தை சாலை மற்றும் குன்றத்தூர் சாலையை இலகுவாக அடைவதற்காகத் துவங்கப்பட்ட பல்லாவரம் மேம்பாலத்தின் நிறைவுறாக நிலையில் இருக்கும் தூண்கள் இலக்கை நோக்கிச் செல்பவர்களுக்கு ஒரு பெரிய தடையாக நிற்கின்றன.
திட்டத்தின் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம்: 2015 ஆம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டு, 2018 ன் மையத்தில் நிறைவு செய்வதாக இருந்த இம் மேம்பாலத்தின் பணிகள் இன்னும் நடந்துகொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் இதன் செலவு மதிப்பீடு ரூ.69 கோடியாக இருந்தது ஆனால் இதில் ஏற்பட்ட தாமதங்கள் அதன் செலவினத்தை ரூ.83 கோடி வரை உயர்த்தும் என்று உணர்த்துகிறது. கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த மேம்பாலம், ஜி.எஸ்.டி சாலையில் இருபுறமும் வைத்திருக்கும் தடுப்புகளினால், அங்குள்ள போக்குவரத்து நெரிசலை இன்னும் மோசமாக்கியுள்ளது. பயணிகள் தினசரி அடிப்படையில் அந்த சாலையைக் கடப்பதைக் கடினமாக உணருகிறார்கள்.
தாமதத்திற்கான காரணங்கள்: கட்டுமானத்தில் ஏற்பட்ட தாமதத்திற்கு மணல் வாங்குவது தொடர்பான பிரச்சினைகள் காரணமாகக் கூறப்படுகின்றன. அதிகாரிகள், ஆற்று மணலுடன் தயாரிக்கப்பட்ட மணல் (எம்-மணல்) வாங்குவதற்கான முயற்சிகளை எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மணல் தட்டுப்பாடு காரணமாக கட்டுமானப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்பகுதியில் வாகன இயக்கம் மிக அதிகமாக இருப்பதால், ஒரு சாத்தியமான போக்குவரத்து மேலாண்மை திட்டத்தை வரைவதும் கூட தாமதத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
ரெட்டேரி மேம்பாலம்
பணி துவக்கம்: ஜனவரி 2017
செலவு மதிப்பீடு: ரூ.41 கோடி
திட்டத்தின் நோக்கம்: ரெட்டேரி மேம்பாலத்தின் இரண்டாவது கரமானது போக்குவரத்தை மூலக்கடையிலிருந்து அண்ணாநகருக்கு செல்ல எளிதாக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டது.
திட்டத்தின் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம்: இந்த மேம்பாலம் ஜூலை 2018 ல் கட்டிமுடிக்கப்பட வேண்டியது. ஆனால், அதன் கட்டுமானப் பணிகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, அதனால் உள் வளைய சாலையில் (inner ring road) போக்குவரத்து நெரிசல் மற்றும் அதனால் ஏற்படும் தாமதம் ஆகியவற்றுக்குக் காரணமாக உள்ளது. மேம்பாலத்துடன் நடைபயணிகள், சுரங்கப்பாதை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இத்திட்டம் துவங்கும்போது அதன் செலவு மதிப்பீடு ரூ.29 கோடியாக இருந்தது. கட்டுமானம் தொடங்கிய பின்னர், அடித்தளத்தை உறுதிப்படுத்த கூடுதலாக 7 தூண்கள் தேவைப்பட்டதால் மேம்பாலத்தின் நீளத்தை அதிகரிக்க வேண்டியிருந்தது.
தாமதத்திற்கான காரணங்கள்: மின் கேபிள்கள் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் போன்ற பயன்பாடுகளை நகர்த்தும் பணியானது திட்டத்தை முடிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கீழே உள்ள தரையின் ஸ்திரத்தன்மை மற்றும் பிற சாதனங்கள் இருப்பதைப் பற்றிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடமளிக்கும் வகையில் மேம்பாலத்தின் வடிவமைப்பையும் மாற்ற வேண்டியிருந்தது.
கீழ்கட்டளை மேம்பாலம்
பணி துவக்கம்: பிப்ரவரி 2016
செலவு மதிப்பீடு: ரூ. 64 கோடி
திட்டத்தின் நோக்கம்: மேடவாக்கம் பிரதான சாலை மற்றும் பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் போக்குவரத்தை இலகுவாக்குவது.
திட்டத்தின் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம்: 2018 ஆம் ஆண்டின் மையப்பகுதியில் நிறைவு பெறும் வகையில் ரூ.64 கோடி மதிப்பீட்டில் இந்த மேம்பாலத்தின் கட்டுமானம் துவக்கப்பட்டது. அதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் பயன்படுத்தப்படாத தூண்கள் ஆகியவற்றினால் போக்குவரத்து நெரிசல் இன்னும் மோசமாகியுள்ளது. மேம்பாலப் பணியை முடிக்க மாற்றியமைக்கப்பட்ட காலம் மார்ச் 2020 ஆகும்.
தாமதத்திற்கான காரணங்கள்: முதல் காலக்கெடு முடிவடையும் முன் வெறும் 25% வேலை மட்டுமே முடிவடைந்திருந்ததனால் ஒப்பந்ததாரர்களை மாற்றியதை தாமதத்திற்குக் காரணமாக சொல்லப்படுகிறது. முன்பிருந்த ஒப்பந்ததாரர் தாமதத்திற்கான காரணங்களைத் தெரிவிக்காததினால் மறுபடியும் டெண்டர்கள் விடப்பட்டு ஒரு புதிய ஒப்பந்ததாரர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
துறைமுகம்-மதுரவாயல் உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை
பணி துவக்கம்: ஜனவரி 2009
செலவு மதிப்பீடு: ரூ. 2400 கோடி
திட்டத்தின் நோக்கம்: கண்டெய்னர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன் முன்மொழியப்பட்ட, மதுரவாயலில் இருந்து பூந்தமல்லி வரையிலான உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலையானது ஒரு பத்து வருட தாமதத்தைக் கண்டிருக்கிறது.
திட்டத்தின் விவரங்கள் மற்றும் தற்போதைய நிலவரம்: உயர்த்தப்பட்ட அதிவேக நெடுஞ்சாலை 20 கி.மீ நீளம் வரை செல்வதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் முழுமையடையாத தூண்கள் கடந்த ஆண்டின் இறுதியில் அதிகமாக பகிரப்பட்ட “மீம்“ ஆனது. இத்திட்டம் குறித்த சமீபத்திய தகவல் என்னவென்றால், முந்தைய டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதையடுத்து 2020 ஆம் ஆண்டில், இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை புதிய டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தாமதத்திற்கான காரணங்கள்: திமுக மற்றும் அதிமுக இடையில் நடக்கும் அரசியல் சச்சரவிற்கு இத்திட்டம் பலியாகியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலையின் பெரும்பகுதி கூவம் ஆற்றின் ஓரமாக ஓடுவதால் திமுகவால் முன்வைக்கப்பட்ட இத்திட்டம், சுற்றுச்சூழல் குறித்த சவால்களை சுட்டிக்காட்டி 2012 இல் அதிமுகவால் நிறுத்தப்பட்டது. அத்துடன், அதன் பாதையில் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வெளியேற்றி மீள்குடியேற்றம் செய்ய வேண்டியது குறித்த கவலைகளையும் எழுப்பியதால் இத்திட்டம் மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.
(Read the original article in English here.)