Translated by Sandhya Raju
தேசிய ஊரடங்கின் போது, நீங்கள் வசிக்கும் நகரத்திலேயே ஒரு அந்நியனாக தனிமைப்படுத்தப்படுவதை என்ணிப் பாருங்கள்: இருக்க இடமில்லை, உங்களின் சொந்த ஊருக்கும் போக முடியாத நிலை. முன் அறிவிப்பின்றி வீட்டு உரிமையாளர்கள் காலி செய்யச் சொல்வதால், இந்த கொடுரமான நிலைமையை தங்கும் விடுதியில் உள்ளவர்களும், PGயாக வசிக்கும் சிலரும் சப்தமில்லாமல் அனுபவித்து வருகிறார்கள்.
வைஷாலி* (25) சென்னையில் ஒரு பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். அங்கு வசிக்கும் பெரும்பாலான மாணவிகள் கல்வி நிறுவனங்கள் மூடியவுடன் தங்கள் சொந்த ஊர் விரைந்தனர், ஆனால் இவர் தனியார் அலுவலகத்தில் வேலையில் உள்ளதால், விடுதியிலேயே தங்கினார். “வேலை காரணமாக இங்கு வெகு சிலரே உள்ளோம். இப்பொழுது விடுதியிலிருந்து வெளியேறச்சொல்கின்றனர், என்ன செய்வது என்று தெரியவில்லை” என்கிறார் வைஷாலி.
வைஷாலியை போன்று பலர் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். போக்குவரத்து இல்லாததால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாது. ஆனால், விடுதியில் தங்கியுள்ளவர்களை தங்களின் விருப்பத்திற்கேற்ப உரிமையாளரால் வெளியேற்ற முடியுமா?
வெளியேற்றம் குறித்து, உள்துறை அமைச்சகம் கடும் விதிமுறைகளை விதித்துள்ளது. அதன்படி வாடகைத்தாரர்கள் ஊரடங்கின் போது வெளியே செல்வதை தடுக்க வழிமுறைகளை வகுத்துள்ளது.
உத்தரவு
உள்துறை அமைச்சகம் விடுத்துள்ள உத்தரவின் 4ஆம் விதி படி, வெளியூரிலிருந்து வந்து தங்கியுள்ளவர்களிடம், இந்த காலத்தில் ஒரு மாத வாடகையை உரிமையாளர்கள் வசூலிக்கக்கூடாது என கூறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான வாடகையை உரிமையாளர்கள் இரண்டு மாதம் பின்பு பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
இந்த சூழலில், நீங்கள் 100 அல்லது அருகாமையில் உள்ள காவல் நிலையத்தை அணுகி, புகார் பதிவு செய்யலாம். |
வாடகைக்கு வீடு எடுத்து வசிப்பவர்கள் வேறு விதமான பிரச்சனையை சந்திக்கின்றனர். கேரளாவை சேர்ந்த கிரிஜா* இங்கு வேலை பார்க்கிறார். தாம்பரத்தில் PG யாக தங்கியிருக்கும் இவர், தன்னுடைய வீட்டு உரிமையாளர் வாடகையை மார்ச் மாத வாடகையை மாத இறுதியிலேயே செலுத்துமாறு கூறுவதாக சொல்கிறார். “எப்பொழுதும் வரும் மாதம் முதல் வாரத்தில் வாடகையை கட்டுவேன், மார்ச் மாத வாடகையை அந்த மாதமே செலுத்தினாலும் அடுத்த மாதம் கடினமாக இருக்கும், ஏனெனில் போன மாத சம்பளம் இன்னும் வரவில்லை.” என்கிறார் அவர். சம்பளம் குறித்தும் தகவல் இல்லை எனக் கூறும் கிரிஜா “என் வீட்டு உரிமையாளர் மிகவும் கறாரானவர். கால அவகாசம் கொடுக்க மாட்டார்,” என்கிறார்.
உரிமையாளர் காலி செய்ய நிர்பந்திக்க முடியாது
அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிரிஜாவை போன்றவர்கள் ஒரு புறமிருக்க, தினத் தொழிலாளிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் கோரிக்கையெல்லாம் இந்த அசாதரண சூழல் முடிவுக்கு வரும் வரையிலாவது, வாடகையை உடனே செலுத்தும் நிர்பந்த்ததை தளர்க்க வேண்டும் என்பதே ஆகும்.
உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் 5ஆம் விதிபடி வீட்டு உரிமையாளர், தொழிலாளியையோ அல்லது மாணவ(வி)ர்களை காலி செய்ய சொன்னால், சட்டத்தின் (பேரழிவு மேலாண்மை சட்டம் 2005) கீழ் நடவடிக்கைக்கு உள்ளாவர்கள். இந்த உத்தரவை மாவட்ட நீதிபதி அல்லது துணை ஆணையர் மற்றும் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் / காவல்துறை கண்காணிப்பாளர் / காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அசாதாரண சூழலில், கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கையின் காரணமாக பலர் பொருளாதார சிரமத்திற்கு ஆளாகியிருப்பதால், வீட்டின் உரிமையாளர்கள் வாடகைதாரர்களை காலி செய்ய கட்டாயப்படுத்த கூடாது என அந்த உத்தரவு தெளிவாக கூறுகிறது.
இனப்பிரச்சினைகள்
நீண்ட காலமாக இந்நகரத்தில் தங்கியிருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் இன்னும் அதிகம் என்றே கூறலாம். ஆலந்தூர், நங்கனல்லூர், சிந்தாதரிபேட்டை, எக்மோர் என நகரத்தின் பல பகுதிகளில் சென்னை மாநகராட்சி அமைத்துள்ள புலம்பெயர்ந்தோர் முகாம்களில் இவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
“எங்கள் தோற்றம் சீனர்களைப் போல் உள்ளதால், நாங்கள் குறிவைக்கப்படுகிறோம். காலி செய்ய எங்களை கட்டாயப்படுத்தியதால், காவல் துறையிடம் நாங்கள் புகார் அளித்தோம். தற்பொழுது, நகரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளோம். எங்களுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றிகடன் பட்டுள்ளோம்,” என்கிறார் வடகிழக்கு இந்திய நலச் சங்க சென்னை கிளையின் தலைவர் வபாங் தோஷி.
அதிகாரிகள் இவர்களுக்கு அளித்துள்ள தற்காலிக தற்காப்பு போலவே, பலரும் இவர்களுக்கு உதவி வருகின்றனர். வேளாச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி தங்கள் வளாகத்தில் புலம்பெயர்ந்தவர்களை தங்க அனுமதி அளித்துள்ளது.
எவ்வாறு உதவியை நாடலாம்?
இது மத்திய மாநில அரசுகள் வகுத்துள்ள விதிகளை மீறும் செயல் என்பதால் என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம்? காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம். இது போன்ற புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வாய்வழி உத்தரவு இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
“முதல் புகாரில், உரிமையாளர்களை எச்சரிக்கிறோம். உத்தரவை கடைபிடிக்க தவறினால், IPC 188 கீழ் – அறிவிப்பு மீறல் – முதல் தகவல் அறிக்கை தாக்கல் (FIR) செய்கிறோம். இதன்படி அபாரத்துடன் இரண்டு ஆண்டு சிறை மற்றும் விடுதியின் உரிமமும் ரத்து செய்யபடும்,” என்கிறது காவல்துறை வட்டாரம்,
விடுதியில் தங்குபவர்களிடமிருந்து இது வரை புகார் இல்லாவிட்டாலும், வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியர்களிடமிருந்து வரும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. “முதல் புகார் பெறப்பட்டதும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம், இதில் பலர் தவறை உணர்ந்து நடந்து கொள்கின்றனர். வெளியேற்றப்பட்ட சிலருக்கு நாங்கள் மாற்று தங்கும் ஏற்பாடுகளை செய்கிறோம்,” என மேலும் தெரிவித்தார். தற்பொழுது ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இது போன்ற புகார்கள் அதிகரிக்கலாம் என தெரிகிறது. “எங்கிருந்தாலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதிலேயே தற்பொழுது நாங்கள் கவனம் செலுத்துகிறோம்.” என்கிறார் காவல்துறை அதிகாரி.
*பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது
[Read the original article in English here.]