கொரோனா தொற்றின் 2வது அலை ஒரு வித தீவிரத் தன்மையுடன் பரவி அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மீண்டும் ஒருமுறை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொற்றின் தீவிரம் சற்றே குறைந்து, ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு, ஒரு புதிய இயல்புக்குத் திரும்பிய சிறிது காலத்தில் அசுர வேகத்தில் பரவி, அதிகளவில் உயிர்பலியையும் ஏற்படுத்திவருகிறது கொரோனா என்னும் இக்கொடிய தொற்று.
இந்த சவாலான காலகட்டத்தின் போது சேவைக்களத்தில் முன் நிற்பவர்களில் இந்தக் கட்டுரைக்குரியவர்களும் அடங்குவர். நாம் ஆர்டர் செய்யும் உணவினை நம் இருப்பிடத்திற்கே குறித்த நேரத்திற்குள் கொண்டு வந்து தரும் இவர்கள் நகரவாசிகளின் வாழ்வில் ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறார்கள்.
ஸோமாடோ (Zomato) மற்றும் ஸ்விக்கி (Swiggy) போன்ற நிறுவனங்களைச் சார்ந்த ‘டெலிவரி பார்ட்னர்கள்’ என்றழைக்கப்படும் உணவு விநியோகிப்பவர்களின் நிலை குறித்த ஒரு சிறிய ஆய்வுதான் இது. இவர்களில் இளைஞர்கள் மட்டுமன்றி, நடுத்தர வயதுடையர்களும், பெண்களும் கூட இருக்கின்றனர்.
Read more: Meet the men who satisfy your midnight hunger pangs
சென்னையை எடுத்துக் கொண்டோமானால் இந்த வேலைக்கு வருபவர்கள் உள்ளூர்க்காரர்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்தவர்களும் அடங்குகின்றனர் சென்னையில் நாளுக்கு நாள் இந்த சேவையை பயன்படுத்துபவர்கள் அதிகரித்து வரும் வேளையில் மற்ற மாவட்டங்களில் விவசாயம் பொய்த்தும் வேலை இழந்தும் வரும் சூழலில் குடும்பஸ்தர்கள் கூட வாழ்வாதாரத்திற்கான 5வருமானம் ஈட்டும் ஒரு தொழிலாக இதனை வரித்துக் கொண்டு இங்கு வந்த வண்ணம் உள்ளனர்
ஸ்விக்கியில் டெலிவரி பார்ட்னராக இருக்கும், திருவண்ணாமலையைச் சேர்ந்த சந்தோஷ் தன்னுடைய நேரடி அனுபவங்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். கடந்த வருடம் ஊரடங்கு காலத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்ற இவர், பல மாதங்களுக்குப் பிறகு, வேலையைத் தொடர்வது சம்பந்தமாக அலுவலகம் சென்றபோது, ஒரு நாளைக்கு குறைந்தது 50 பேராவது தமது பெயர்களைப் பதிவு செய்ய வருவதைக் காணமுடிந்ததாகக் கூறினார்.
அவருடைய கூற்றுப்படி சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் பல நூறு பேர்கள் இருப்பதாக தெரிகிறது மொத்தமாக சென்னையில் பல ஆயிரம் பேர் இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது எல்லாம் சரியாக நடந்தால் இந்த வேலையில் ஏறத்தாழ 30 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதால் இதனை நாடி வருகின்றனர்
சுறுசுறுப்பாகவும் நேர்மையாகவும் இருந்து அதிகமாக டெலிவரி செய்தால் தினசரி ஒரு ஊக்கத்தொகையும் வாரம் 500 ரூபாய்க்கும் அதிகமாகவே ஊக்கத்தொகையும் கிடைக்கிறது. அத்துடன் பகுதி நேரம் முழு நேரம் என்று ஒருவரது வசதிக்கேற்ப இதனில் வாய்ப்பு இருக்கும் அளவு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வாடிக்கையாளரின் கைகளில் இவர்களின் வாழ்க்கை
ஆனால் இத்தனை வாய்ப்பிருந்தும் இவை எல்லாம் சரியாக நடக்கும் பட்சத்தில் தான். டெலிவரி பார்ட்னர்கள் உண்மையாகவும் சுறுசுறுப்பாகவும் முழு உழைப்பைத் தரும் போதிலும் வாடிக்கையாளர்கள் தரும் ரேட்டிங் அவர்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளும் முறை போன்றவற்றில் தான் இவைகள் சிக்கலின்றி வாய்ப்பாக அமையும் இல்லை என்றால் சில நேரம் ஒருவரின் வாழ்வாதாரமே சிதையும் தருணங்கள் இருக்கத்தான் செய்கிறது.
இந்த ‘டெலிவரி பார்ட்னர்‘கள் மீது, ‘குறித்த நேரத்திற்கு வருவதில்லை‘, ‘ஆர்டர் செய்த உணவிலிருந்து அவர்கள் சிறிது எடுத்துக்கொள்கிறார்கள்‘ மற்றும் ‘மரியாதை இல்லாமல் நடந்து கொள்கிறார்கள்‘ போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி நிறுவனத்துடன் தொடர்புகொண்டு பெரிய அளவில் புகார் அளித்து வேலையே இல்லாமல் போகும் சம்பவங்களும் நடக்கிறது.
கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் சீருடை அணிந்து மின்னல் வேகத்தில் சாலையில் செல்லும் இவர்கள், பல தருணங்களில் தம் உயிரைப் பணயம் வைத்துதான் நமக்கான உணவைக் கொண்டு வந்து தருகிறார்கள் என்றால் அதை யாரும் மறுக்கமுடியாது. “குறித்த நேரத்தில் ‘டெலிவரி‘ செய்து விடவேண்டும் என்கிற பதைபதைப்பில் சாலையில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு கீழே விழுந்தாலும், உடலில் ஏற்பட்ட காயத்தைக்கூட கவனிக்காமல் உணவுப்பொட்டலங்கள் பத்திரமாக இருக்கிறதா என பதட்டத்துடன் சரிபார்ப்பவர்களைத்தான் நாம் காணமுடிகிறது“, என்கிறார் அக்காட்சியை நேரடியாகக் கண்ட மற்றொரு இளைஞரான தீபன்.
Read more: Life on the go: Meet your Swiggy delivery person
காலில் ரத்தம் வழிவதைப் பார்த்து ஒருவர் கடிகாரத்தைப் பார்த்து எழுந்து ஓடுவதைத்தான் அங்கு காண முடிகிறது என்றால் நம்மில் சிலர் அவர்களை இந்த நிலைக்கு தள்ளிவிட்டுளோமோ என்ற உறுத்தல் நியாயமான மனங்களுக்கு எழவே செய்யும்.
இது போன்ற பல நேரடி அனுபவங்களைக் கண்ட சந்தோஷ் கூறும்போது, “எனது அனுபவத்தை பொருத்தவரை நாம் உண்மையாகவும் கவனமாகவும் நடந்து கொள்ளும் வரை பெரிய பாதிப்பு இல்லை தான் என்றாலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக தாமதம் ஆகும் போதும் விதிகளை மீறும் யாரோ ஒருவரால் நாம் விபத்துக்குள்ளாகி உணவு சிதறிவிடும் போதும் சில நேரம் உணவகங்களில் தரக்குறைவான உணவைத் தந்திடும்போதும் நாமே பொறுப்பு ஏற்க வேண்டியிருக்கிறது சிலர் இகழும் வகையில் கோபத்துடன் எங்களை பேசி வாடிக்கையாளர் மையத்திற்கு புகார் செய்து கோபத்தை காட்டுகின்றனர். வேறுசிலர் தங்களது அப்போதைய மனநிலைக்கு ஏற்ப அவசியம் இல்லாமல் ஏதோ ஒரு குறையை கூறி கோபப்படுவதும் உண்டு என்றும் கூறினார். ஒரு முறை அதிகாலை ஒரு மணிக்கு ஒருவருக்கு டெலிவரி செய்த போது அவர் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் கோபமாக திட்டியது ஒரு கசப்பான அனுபவமாக மனதில் பதிந்துள்ளது’’, என வேதனையுடன் குறிப்பிட்டார்
அவர் மேலும் கூறிய ஒரு கருத்து தான் இந்த இந்த விஷயத்தை சரியாக பார்ப்பதற்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை நமக்கு தருகிறது எனலாம். “வாடிக்கையாளர் தரும் ரேட்டிங்கை வைத்துதான் எங்கள் வாழ்க்கை நகர்வதற்கான இந்த வேலை இருக்கின்றது என்று பார்க்கும்போது நல்ல ரேட்டிங்கையும் நேர்மறையான கருத்துகளையும் பெறுவற்குதானே நாங்கள் முயற்சி செய்வோம். எங்கோ யாரோ ஒருவர் போதிய புரிந்துணர்வு இல்லாமல் தவறு செய்திருக்கலாம் ஆனால் பெரும்பான்மையானோர் சரியானபடி நடந்து புகார் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே எச்சரிக்கையுடன் உள்ளனர்“, என்றார்.
புரிதலே தீர்வாக
வாடிக்கையாளர்கள் அனைவருமே கடினமாக நடந்துகொள்பவர்கள் அல்லர் என்பதும் நமக்குத் தெரிந்ததே. பலர் கனிவுடனும், மரியாதையுடனும் நடத்துகிறார்கள் என்றும் இன்னும் சிலர் நிலைமையைப் புரிந்து ஆறுதல் கூறி உதவும் மனப்பான்மையுடன் நடந்துகொள்கிறார்கள் என்றும் அத்தகைய மனிதப் பண்பே எத்தகைய சவால்களையும் எதிர்கொண்டு இவ்வேலையில் நீடிப்பதற்குத் தமக்கும் தம்மைப் போன்ற ஏராளமானவர்களுக்கும் காரணியாக உள்ளது எனவும் கூறுகிறார், சந்தோஷ்.
தற்போது கொரோனாவில் இரண்டாவது அலை தீவிரமடைந்து புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது உணவகங்களில் யாரும் அமர்ந்து உணவருந்த இயலாத சூழலில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த டெலிவரி சேவைகளில் ஈடுபடும் இவர்களின் உண்மை நிலையை நாம் அறிந்து கொள்வது நாம் சரியாக நடந்து கொள்வதற்கு உதவும்
இந்த நேரத்தில் உள்ள ஆபத்துக்களை உணர்ந்து தான் இவர்கள் பலதரப்பட்ட மனிதர்களை பல்வேறு இடங்களில் சென்று சந்தித்து இந்த சேவையை வழங்கி வருகின்றனர் கல்விச் செலவுக்காகவோ அல்லது குடும்பத்தின் ஒட்டுமொத்த தேவைக்காகவோ இந்த வேலையை நம்பி இருக்கும் பல ஆயிரக்கணக்கான நபர்களில் ஒருவரை தான் நாம் எதிர்கொள்கிறோம் என்ற மனப்பான்மையுடன் அவர்களை அணுகும் போது தான் அவர்களைச் சார்ந்த பலரது வாழ்வு சீராக செல்வதற்கு நம்மால் ஆன பங்கினை ஆற்றுகிறோம் என்கிற மன ஆறுதல் நமக்குக் கிடைக்கும்.