Translated by Sandhya Raju
தரமற்ற சாலைகள், மேடு பள்ளங்கள், சீரற்ற ஒட்டு வேலை செய்யப்பட்ட சாலைகள் ஆகியன சென்னையின் ஒரு அங்கம். புது சாலைகள் போடப்பட்டவுடன் அரசு நிறுவனங்களால் அவை தோண்டப்படுகிறது. இதனால், சாலையை சீரமைக்க புகார் அளிக்கப்பட்டாலும், பிற துறைகளின் மீது அதிகாரிகள் பழி சுமத்துகின்றனர். சென்னையில் சாலைகள் அமைப்பதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து பொது மக்களின் அறியாமையே இதற்கு காரணம்.
சென்னையில் போடப்படும் சாலைகளின் வகைகள், அவற்றைப் பற்றி எங்கு புகார் செய்வது, பொதுமக்கள் எப்படி கண்காணிப்பது என்பது பற்றிய விளக்கங்கள் உங்களுக்காக இங்கே வழங்கியுள்ளோம்.
சென்னை சாலைகள் மற்றும் மாநகராட்சியின் பங்கு
சென்னை மாநகராட்சியின் கீழ் இரண்டு வகையான சாலைகள் வருகின்றன.
- பேருந்து வழிதடங்கள் சாலைகள் (BRR): இரு சக்கர வாகனங்கள் முதல் கன ரக வாகனங்கள் வரை அனைத்து வகையான வாகனங்களும் செல்லும் சாலை. உதாரணமாக, காமராஜர் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, வேளாச்சேரி சாலை(தரமணி வரை), சர்தார் பட்டேல் சாலை போன்றவை இதில் அடங்கும். சென்னையில் 387 கி.மீ வரை நீண்ட 471 BRR சாலைகள் உள்ளன.
- உள் சாலைகள்:BRR சாலைகள் தவிர பிற சாலைகள் அனைத்தும் உள் சாலைகளாகும்.
மாநகராட்சியின் கடமைகள்:
- பேருந்து வழித்தடங்கள், சாலை விரிவாக்கம், நடைபாதைகள், போக்குவரத்து தீவு, கிரானைட் மூலம் சென்டர் மீடியன் கட்டுதல், கிரில், சாலை பள்ளங்களை சீரமைத்தல், பேருந்து நிறித்துமிடங்கள் மற்றும் தெரு தளபாடங்கள் அமைத்தல் போன்ற போக்குவரத்து மேம்பாட்டுப் பணிகள் அடங்கும்.
- ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OFC) நிறுவனங்களுக்கு ஆப்டிக் ஃபைபர் கேபிள் அமைப்பதற்கு அனுமதி வழங்குதல், விதிமுறைகளின்படி நிறுவனங்களிலிருந்து தொடர்புடைய வாடகை மற்றும் மறுசீரமைப்பு கட்டணங்களை வசூலித்தல்.
- சாலை தொடர்பான சட்ட விவகாரங்கள், ஆர்டிஐ, ரிட் மற்றும் சாதாரண மனுக்கள் மற்றும் புகார்களையும் இந்த துறை கவனித்து வருகிறது.
சென்னை மாநகராட்சி போல் பிற அரசு துறைகளும் சில வகையான சாலைகளை கவனிக்கிறது. மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் (TNRDC), தொழில்துறை உற்பத்தியாளர்கள் சங்கம் (IEMA), கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (AIEMA) மற்றும் தமிழ்நாடு குடிசைப்பகுதி அனுமதி வாரியம் (TNSCB) ஆகியவை நகரின் சில சாலைகளுக்கான பிற நோடல் ஏஜென்சிகளாகும்.
Read more: RTI data reveals that only 34% of Chennai roads are flood proof
நல்ல சாலையின் அம்சங்கள் என்ன?
நல்ல தரமான சாலை என்பது கீழ் வரும் அளவுருக்களை கொண்டது:
- அலை போன்று மேலோக்கி இறங்கும் சாலைகள்
- பள்ளம் இல்லாதவை
- சாலை பள்ளங்கள் உடனே சீரமைக்கப்பட்டவை
- சேதங்கள் அல்லாத சாலைகள்
- மென்மையான ஓட்டம் அளிப்பவை
- சரியான சாய்வு – கேம்பர் (சாலையில் இருந்து நீர் வடிகால் சாய்வு சேர்க்கப்பட்டது) அல்லது சூப்பர் உயரம் (மையவிலக்கு விசையின் விளைவை எதிர்கொள்ள வளைவு வழியாக சாலையின் வெளிப்புற விளிம்பு உயர்த்தப்பட்டவை) – இது நீர் தேங்குவதைத் தடுக்க உதவுகிறது.
- மழை நீர் தேங்குவதை தடுக்க மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டவை
- இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கன ரக வாகனங்கள் என பிரிக்கப்பட்ட சாலைகள்.
- பிரத்யேக பார்க்கிங் வசதி கொண்டவை
- சாலை சந்திப்புகளிலிருந்து 150 மீட்டர் தொலைவில் பேருந்து நிறுத்தம்
- நடைபாதைகள் கொண்டவை
- ஆக்கிரமிப்பு இல்லாத சாலைகள்
சாலைகள் எவ்வாறு அமைக்கப்படுகின்றன?
சாலைகளின் மேல் அடுக்கிலிருந்து 500 மீட்டர் வரை மண்ணின் தரத்தால் சாலை அடுக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன. மண்ணின் தரத்தைப் புரிந்து கொள்ள, பிஆர்ஆர் துறை கலிபோர்னியா தாங்குதல் விகிதம் (சிபிஆர்) என்ற சோதனையை மேற்கொள்கிறது. இந்த சோதனை மூலம் மேலடுக்கு மண்ணின் கீழ் உள்ள அடுக்கின் திடம் மற்றும் சாலை, நடைபாதையின் கீழ் பகுதியின் ஸ்திரத்தன்மையை அறியலாம். சோதனை முடிவின் அடிப்படையில் நடைபாதையின் தடிமன் மற்றும் அதன் கூறு அடுக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன.
“சிபிஆர் மதிப்பின் அடிப்படையில், சாலைக்கு அடர்த்தியான பிடுமினஸ் மக்கடம் (டிபிஎம்), அதிக கனரக வணிக வாகனங்கள் கொண்ட சாலைகளுக்குப் பயன்படுத்தப்படும் பைண்டர் அல்லது பிட்மினஸ் கான்கிரீட் (பிசி) தேவைப்படுகிறதா என்பதை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம்” என்று மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகிறார்.
இன்று அமைக்கப்பட்ட சாலை நாளை தோண்டப்படுவது ஏன்?
பேருந்து வழிதடங்கள் மற்றும் உள் சாலைகளில் சாலை தோண்டும் பணிகளை மேற்கொள்ளும் முன், சென்னை மாநகராட்சியிடம் அனுமதியும் அதற்கான தொகையையும் செலுத்த வேண்டும். சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஆகியவையே பெரும்பாலும் இந்த சாலை தோண்டும் பணிகளில் ஈடுபடுகிறது.
உதாரணமாக, பெரம்பூர் சாலையின் வடக்கு பகுதியில் இந்த ஆண்டு தொடக்கத்தில் போடப்பட்ட சாலை, வளைவு துளை கொண்டு மீண்டும் தோண்டப்பட்டது. கழிவுநீர் குழாய் அறைகளின் உயரத்தை அதிகரிக்க. குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரியத்தால் சில தினங்களுக்கு முன் இந்த பகுதி தோண்டப்பட்டது.
“மாநகராட்சி மற்றும் துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாதது பெரும் சவாலாக உள்ளது. கழிவுநீர் குழாய் அறைகளின் மூடி சரியாக சரி செய்யப்படவில்லை,” என்கிறார் பெரம்பூரில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் ரகுகுமார் சூடாமாணி.
Read more: The citizen’s guide to dealing with ad hoc digging of roads in Chennai
சாலைகள் மீண்டும் எப்போது போடப்படுகிறது?
மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கு முன் போடப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படுகின்றன. சமீபத்தில் போடப்பட்ட சாலைகள் சேதமடைந்தால், மண்டல அளவிலான பொறியாளர்கள் டிசி (வேலை) அல்லது பிராந்திய துணை ஆணையரிடம் (ஆர்.டி.சி) சிறப்பு அனுமதி பெற வேண்டும். பின்னர், ஒரு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கப்பட்டு தொடர் சோதனைகள் செய்யப்படும். பின்னர், டெண்டர் கோரப்பட்டு, பணியை முடிக்க அனுமதிக்கப்படும்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நெடுஞ்சாலை துறைக்கு சமீபத்தில் விடுத்துள்ள ஆணையில், சாலைகள் மீண்டும் போடப்படும் போது அவை தோண்டி எடுக்கப்பட்டு போடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சாலையின் உயரம் கூடுவதை தடுக்கவும், வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் இது உதவும். இது Indian Road Congress விதி 37-ல் உள்ள வடிவமைப்பிற்கான வழிகாட்டுதல்கள் விவரம் படி அமைக்கப்பட வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.
பேருந்து வழித்தட சாலைகள் 40 mm மற்றும் உள் சாலைகள் 30 mm ஆழமும் தோண்டப்பட வேண்டும் என மாநகராட்சி அதிகாரி விவரித்தார்.
சாலைகளில் உள்ள குழிகளை மூட ஒட்டுவேலை பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் பெரம்பூர் திருவேங்கடம் சாலையில், சேதமடைந்த பகுதிகளை மறைக்க மாநகராட்சி சாலைகளை சீரமைக்கிறது. “ஏற்கனவே சாலையின் உயரம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. பலர் சாலையிலிருந்து தங்கள் வீட்டிற்குள் செல்ல இரண்டு படிகள் கீழே செல்ல வேண்டும். வெறும் ஒட்டுவேலை தேவைப்படும் இடங்களில் முழு சாலையும் சீரமைப்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை” என்கிறார் ரகு குமார்.
சாலைகள் சீரமைக்கும் முன் தோண்டப்படவேண்டும் என விதிமுறைகள் இருப்பினும், அவை தொடர்ந்து மீறப்படுகின்றன. சாலைகள் போடப்படும் போது இது குறித்து பொது மக்கள் விழிப்புடன் கண்காணிக்க வேண்டும்..
எங்கு புகார் அளிக்கலாம்?
சாலை புனரமைப்பு முதல் மேம்பாலம் கட்டுமானம் வரை அனைத்து விவரங்களையும் ஒரே நேரத்தில் அறிந்து கொள்ள டாஷ்போர்ட் ஒன்றை மாநகராட்சி உருவாக்கி வருகிறது. பொதுமக்கள் இந்த டாஷ்போர்ட் மூலம் நேரடி புதுப்பிப்புகளைச் சரிபார்க்கலாம்.
நம்ம சென்னை செயலி அல்லது 1913 என்ற தொலைபேசி மூலம் மக்கள் புகார்களை பதிவு செய்யலாம். இந்த புகார்களை களைய, மாநகராட்சி காலக்கெடுவையும் வகுத்துள்ளது:
புகார் | காலக்கெடு |
---|---|
பள்ளங்களை மூடுதல், தோண்டப்பட்ட சாலைகளை சரிசெய்தல் | 2 நாட்கள் |
பேட்ச் ரிப்பேர் (நடைபாதை சென்டர் மீடியன்) | 1 வாரம் |
சாலைகளில் உள்ள தடைகளை அகற்றுதல் | 1 வேலை நாள் |
மழை நீர் சேகரிப்பு தொட்டி மூடியை மாற்றுதல் | 1 வேலை நாள் |
பொது நிலத்திலிருந்து குப்பைகளை உரிமையாளர் நீக்க | 2 நாட்களுக்குள் உரிமையாளருக்கு அறிவிப்பு அனுப்புதல் |
அறிவிப்பை உரிமையாளர் மீறினால், சென்னை மாநகராட்சி நீக்க | அறிவிப்பு அனுப்பிய ஒரு வாரம் பின் (இதற்கான செலவு உரிமையாளரிடம் பெறப்படும்) |
நடைபாதை ஆக்கிரமிப்பு, பள்ளங்கள், அடிக்கடி சாலைகள் தோண்டப்படுவது ஆகியவை உட்பட நகரத்தில் உள்ள சாலைகளின் தரம், முக்கிய பிரச்சனைகள் ஆகும்.
புகார்களை அளிப்பதை ஊக்குவிக்கும் அதே வேளையில், மேலிருந்து கீழான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும் என இந்திய சாலை காங்கிரஸின் முன்னாள் துணைத் தலைவரும், நெடுஞ்சாலைத் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளருமான சாமுவேல் ஈ ஜெபராஜன், பரிந்துரைக்கிறார்.
“சாலைகள், ஆக்கிரமிப்புகள் தொடர்பான பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை சரிசெய்ய ஒரு ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு குழுவை நியமிப்பதன் மூலம் வழக்கமான கூட்டங்கள் மண்டல அளவில் நடத்தப்பட வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.
(இந்திய சாலை காங்கிரஸின் முன்னாள் துணைத் தலைவர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளர், சாமுவேல் ஈ ஜெபராஜன் மற்றும் சென்னை மாநகராட்சியின் மூத்த அதிகாரி ஆகியோரின் தொழில்நுட்ப தகவலின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது)
[Read the original article in English here.]